“சுதந்திரமாக நடமாட கூட முடியவில்லை; வெறிச்சோடியும் கிடக்கிறது” - காசா மருத்துவமனை இயக்குநர் உருக்கம்

காசா - இஸ்ரேல் போர்
காசா - இஸ்ரேல் போர்
Updated on
1 min read

டெல் அவில்: காசாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை தற்போது வெறிச்சோடி காணப்படுவதாக அந்த மருத்துவமனையின் இயக்குநர் முகமது அபு சல்மியா தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான மக்கள் காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் முகமது அபு சல்மியா இது குறித்து கூறுகையில், “காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஊழியர்கள், நோயாளிகள் உட்பட சிலர் மட்டுமே எஞ்சியுள்ளனர். மருத்துவமனையே முற்றிலும் வெறிச்சோடி கிடக்கிறது. சிலர் நடைபாதைகளில் படுத்துக் கிடக்கின்றனர். இந்த மருத்துவமனையின் மையத்தை இஸ்ரேல் சுற்றி வளைத்திருக்கிறது. எஞ்சியிருக்கும் மருத்துவ ஊழியர்களால்கூட சுதந்திரமாக நடமாட முடியவில்லை. மருத்துவமனைகளில் உணவும் தீர்ந்து வருகிறது. புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உட்பட சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படாவிட்டால் இறந்துவிடுவார்கள்” என்றார்.

இதனிடையே, தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரின்மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் 28 பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதில் பெரும்பாலோனோர் குழந்தைகளே ஆவர். இஸ்ரேலில் நிலவிவரும் போருக்கு மத்தியில் காசாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சமர் ராபி என்ற பெண் வேதனை தெரிவிக்கிறார். தன்னுடன் வசிக்கும் 15 பேருக்கு எப்படி உணவளிக்கப் போகிறேன் என்று கண் கலங்க நிற்கிறார்.

எரிபொருள் மற்றும் மின்சாரம் இல்லாததால் காசா பகுதியில் உள்ள பேக்கரிகள் இயங்க முடியாத நிலையில் உள்ளன. வடக்கு காசாவில் உள்ள அல்-ஃபகூரா பள்ளிமீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தின. அல்-ஷிஃபா மருத்துவமனையிலிருந்து வெளியேறுபவர்களை சலா அல்-தின் தெரு வழியாக வெளியேறுமாறு இஸ்ரேலியப் படைகள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிகிறது. காசாவில் இஸ்ரேல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் என பாலஸ்தீன அமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு இன்னும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேலில் ஏறத்தாழ 1,200 பேர் கொல்லப்பட்டனர். 239 பேரை காசா பகுதிக்குள் கடத்திச் சென்றனர். இதனால், இஸ்ரேல் ராணுவம் காசாவின் வட பகுதியில் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடந்த தாக்குதலில் காசாவில் குறைந்தது 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in