Published : 17 Nov 2023 05:47 AM
Last Updated : 17 Nov 2023 05:47 AM

ஜோ பைடன் - ஜி ஜின்பிங் சந்திப்பு: இரு நாடுகளுக்கிடையிலான முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

சான்பிரான்சிஸ்கோ

அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபிஇசி) உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகின்றன.

இந்த மாநாட்டை முன்னிட்டு அமெரிக்கா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கடந்த புதன்கிழமை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து கை குலுக்கினார். இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அவர்கள் கலந்துரையாடினர்.

இஸ்ரேல் - ஹமாஸ், ரஷ்யா - உக்ரைன், தைவான் மீதான சீனாவின் ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு, மருந்துத் தயாரிப்பு, காலநிலை மாற்றம் உட்பட சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர்.

இந்த ஆண்டில் அவ்விரு தலைவர்களுக்கும் சந்திப்பது இதுவே முதல்முறை. அமெரிக்கா - சீனாஇடையில் வர்த்தக ரீதியாக விரிசல் அதிகரித்துவந்த நிலையில், இருநாட்டு தலைவர்கள் இடையிலான சந்திப்பு சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், “இருதரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள உறவுகளை சரி செய்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எங்கள் இருவருக்கும் இடையில் நிறையகருத்து வேறுபாடுகள் உண்டு.ஆனால், கருத்து வேறுபாடுகளைக் களைய, இருவருக்கும் இடையிலான புரிதலை மேம்படுத்திக்கொள்ள நேரடியான தொலைபேசி அழைப்பில் தொடர்பில் இருக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் - ஹமாஸ் விவகாரம் தொடர்பாக ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதேபோல் ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ராணுவ உதவிகளை வழங்குவதை சீனா நிறுத்த வேண்டும் என்றும் ஜோ பைடன் சீன அதிபர் ஜின்பிங்கிடம் வலியுறுத்தினார்.

அமெரிக்க அரசு தைவானுக்கு ராணுவ உதவிகளை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று ஜி ஜின்பிங் கேட்டுக்கொண்டார். முக்கிய உபகரணங்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று பைடனிடம் ஜி ஜின்பிங் வலியுறுத்தினார். அதேபோல்,சீனாவில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பெண்டானில் மருந்து தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க ஜின்பிங் ஒப்புக்கொண்டார்.

இருநாட்டுக்கு இடையிலான ராணுவ தொடர்புகளை மீண்டும்தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x