

சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மதிக்காமல், இந்திய ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் பலியானதாகக் கூறி, இந்திய துணைத் தூதரை 2-வதுமுறையாக அழைத்து பாகிஸ்தான் இன்று கடும் கண்டனம் தெரிவித்தது.
நிகில் செக்டர் பகுதியில் இந்தியப் படைகள் ஆத்திரமூட்டும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி செயல்படுவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம் எனக் கூறி இந்திய துணைத் தூதருக்கு தெற்கு ஆசிய பகுதியின் தலைவர் முகம்மது பைசல் கண்டனம் தெரிவித்தார்.
இந்திய எல்லைப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை 5 வீரர்கள் உள்பட 11பேர் பலியாகி இருக்கிறார்கள். பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டுக்கு பதிலடியும் இந்திய ராணுவத்தினர் அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்திய ராணுவத்தினர் அத்துமீறி செயல்படுவதாகக் கூறி, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணைத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை, இன்று இரண்டாவது முறையாகவும் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து பாகிஸ்தான் பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் தெற்கு ஆசியத் தலைவர் முகம்மது பைசல் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''நிகில் செக்டார் பகுதியில் இந்திய ராணுவத்தினர் ஆத்திரமூட்டும் வகையில் அத்துமீறி செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தோம்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா செயல்படுவது, பிராந்திய அமைதிக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தல் விளைவிக்கும். 2003-ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து இந்திய தரப்பினர் செயல்பட வேண்டும். அத்துமீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்.
இந்த 2 நாட்களில் இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டது.