Published : 01 Jul 2014 10:00 AM
Last Updated : 01 Jul 2014 10:00 AM

அமெரிக்கர்களில் 10-ல் ஒருவர் மரணத்துக்கு மிதமிஞ்சிய மதுப் பழக்கம் காரணம்: 20 முதல் 64 வயது வரை உள்ளவர்கள்

20 முதல் 64 வயது வரையிலான பணியாற்றும் திறன் கொண்ட அமெரிக்கர்களில் 10-ல் ஒருவரது மரணத்துக்கு, வரம்புமீறி மது அருந்துவதே காரணம் என்று புதிய ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.இதன்படி, கடந்த 2006 முதல் 2010 வரை வரம்புமீறி மது குடிக்கும் பழக்கத்தால் சுமார் 88 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் அவர்களின் ஆயுள் காலம் சராசரியாக 30 ஆண்டுகள் குறைந்துள்ளது. அதிகம் குடிப்பதால் உடல்நலம் கெட்டு, மார்பக புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள் போன்றவற்றுக்கு ஆளாகியும், வன்முறை, வாகன விபத்துகள், விஷத்தன்மை கொண்ட மது அருந்துதல் போன்றவற்றாலும் இவர்கள் இறந்துள்ளனர்.

மொத்தத்தில் ஒவ்வொரு ஆண்டும், 25 லட்சம் ஆண்டுகள் வாழத்தகுந்த உயிர்களை அமெரிக்கா இழக்க நேரிடுகிறது. வரம்பு மீறி குடிக்கும் பழக்கத்தால் இறக்கும் அமெரிக்கர்களில் 70 சதவீதம் பேர் பணியாற்றக் கூடிய வயது (20 - 64) கொண்டவர்கள். மேலும் இதில் 70 சதவீதம் பேர் ஆண்கள். சுமார் 5 சதவீதம் பேர் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். மிகுதியாக குடிப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கை நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் (1 லட்சம் மக்கள் தொகைக்கு 51 பேர்) அதிகமாக உள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரும், சிடிசி ஆல்கஹால் திட்டத்தின் தலைவருமான ராபர்ட் ப்ரூவர் கூறுகையில், “அளவுக்கு மீறி குடிக்கும் பழக்கத்தால் பொது சுகாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x