

ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள நாடான கேமரூனின் துணைப் பிரதமர் அமாமொ அலியின் மனைவி கடத்தப்பட்டுள்ளார். இக்கடத்தலின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இக்கடத்தலை போகோஹராம் தீவிரவாதிகள் செய்திருப்பார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தீவிரவாதிகள் ஏராளமானவர்களைக் கடத்தியுள்ளனர். கோலோபடா சுல்தான் செய்னி பவுகர் லாமினே, கோலோபடா நகராட்சி அலுவலகத்தில் இருந் தார். அப்போது அங்கு புகுந்த தீவிரவாதிகள், செய்னி பவுகர் லாமினே மற்றும் அவரது மனைவி, அவர்களின் 5 குழந்தைகள் ஆகியோரைக் கடத்திச் சென்றனர்.
பின்னர், துணைப் பிரதமர் அமாமொ அலியின் வீடு மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி னர். இதில், துணைப் பிரதமர் அமாமொ அலி தப்பிவிட்டார். ஆனால், அவரது மனைவியும், பாதுகாவலரும் கடத்தப்பட்டனர். சில காவல்துறை அதிகாரிகளும் கடத்தப்பட்டுள்ளனர்.
இக்கடத்தலுக்காக நடத்தப்பட்ட தாக்குதலில், 4 குடிமக்கள், 2 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். சுல்தானின் தம்பியும் கொல்லப் பட்டுள்ளார். இந்த இரு தாக்குதல்களும் ஞாயிற்றுக்கிழமை காலை 5.00 மணிக்கு ஒரே நேரத்தில் நடத்தப் பட்டது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப் பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நைஜீரியா எல்லையில் அமைந் துள்ள கேமரூனுக்குள் நுழைந்து, அங்கு கொலை, கொள்ளைச் சம்பவங்களில் போகோஹராம் தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர். போகோஹராம் தீவிரவாதிகள், 200 நைஜீரியா மாணவிகளை கடந்த 3 மாதங்களுக்கு முன் கடத்திச் சென்றனர். அவர்களின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை.
நடப்பாண்டில் மட்டும் போகோஹராம் தீவிரவாதிகளால் 2,000-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். வடக்கு நைஜீரி யாவில் இஸ்லாமிய நாடு அமைப்பதுதான் இவர்களின் குறிக்கோள்.