Published : 17 Jul 2014 07:55 AM
Last Updated : 17 Jul 2014 07:55 AM

காஸாவிலிருந்து வெளியேறும்படி பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை: ஹமாஸ் தலைவர்களின் வீடுகள் மீது தீவிர தாக்குதல்

காஸா மீது ராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் அப்பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் வீடுகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

காஸாவிலுள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான போர் முற்றியுள்ளது. காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், காஸாவில் 208-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இப்போரை நிறுத்துவதற்காக எகிப்து மேற்கொண்ட சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனான் மற்றும் காஸா பகுதியிலிருந்து ராக்கெட் வீசி தாக்குதல் நடத்துகின்றனர். இதுவரை இஸ்ரேல் மீது 1,200க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவற்றை இஸ்ரேல், தனது இடைமறித்துத் தாக்கும் ஏவுகணைகள் மூலம் தகர்த்து விட்டது. பதிலுக்கு இஸ்ரேல் இதுவரை 1,500-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியுள்ளது.

வேறு வழியில்லை

‘காஸா பகுதியிலுள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் காலை 8 மணிக்குள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும்’ என தொலைபேசித் தகவல் மூலம் இஸ்ரேல் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறும்போது, “ஹமாஸுக்கு எதிரான ராணுவத் தாக்குதல் தீவிரப்படுத்தப்படும். போர் நிறுத்தம் இல்லை என்று ஆகிவிட்ட பின் எங்களின் பதில், தாக்குதல் என்பதாக இருக்கும். ராஜீய ரீதியாக தீர்வுகாண்பதுதான் சிறப்பானதாக இருக்கும். ஆனால், ஹமாஸ் எங்களுக்கு வேறு வாய்ப்பைக் கொடுக்கவில்லை. அவர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரிக்கப்படும்” என்றார்.

முன்னதாக, ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் சமி அபு ஸூஹ்ரி எகிப்தின் போர் நிறுத்த சமரச முயற்சியை ஏற்க மறுத்து விட்டார்.

இஸ்ரேல் ராணுவம் 6 மணி நேரம் தனது தாக்குதலை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை மீண்டும் ராக்கெட்களை வீசி தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

தலைவர் வீடுகளுக்கு குறி

ஹமாஸ் இயக்கத்தினரின் முக்கியத் தலைவர்களின் வீடுகளைக் குறிவைத்து, இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் தொடுத்து வருகிறது.

போரா, பொழுதுபோக்கா?

இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதலால் ஏராளமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்து வரும் நிலையில், தெற்கு இஸ்ரேல் பகுதி மக்கள் இரு தரப்பு தாக்குதல்களையும் பொழுதுபோக்கு போன்று மலையுச்சியில் அமர்ந்து வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

குறிப்பாக, ஸ்டெராட் பகுதியைச் சேர்ந்த இஸ்ரேலியர்கள் அருகிலுள்ள மலையுச்சிக்குச் சென்று, நாற்காலி, சோபா ஆகியவற்றைப் போட்டு, அங்கு நொறுக்குத் தீனிகளைத் தின்றபடி, ராக்கெட் தாக்குதல்களை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

ஹமாஸின் ஏவுகணைகள் இடைமறித்துத் தாக்கப்படுவதையும், இஸ்ரேல் மற்றும் காஸா பகுதிக்குள் ராக்கெட்டுகள் விழுந்து சேதம் ஏற்படுத்துவதையும் அவர்கள் தொலை நோக்கி உதவியுடன் கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x