Published : 29 Oct 2023 04:29 AM
Last Updated : 29 Oct 2023 04:29 AM
டெல் அவிவ்: இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் வான் படை கமாண்டர் அசம் அபு ரகபா கொல்லப்பட்டார்.
ஹமாஸின் வான் படை பிரிவு தலைமை கமாண்டராக அசம் அபு ரகபா செயல்பட்டு வந்தார். அந்த அமைப்பின் பீரங்கி தகர்ப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள், பாராகிளைடர்கள், வான்வழி கண்காணிப்பு ஆகிய பிரிவுகள் அசம் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தன. கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நகரங்கள் மீது பாராகிளைடர்கள், ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அசம் அபு ரகபா மூளையாக செயல்பட்டார்.
இஸ்ரேல் உளவு அமைப்பான ஷின் பெட்டை சேர்ந்த உளவாளிகள், காசா பகுதியில் அவரை மிக தீவிரமாக தேடி வந்தனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு வடக்கு காசாவின் ரகசிய சுரங்கப் பாதையில் அசம் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தின. இதில் ஹமாஸின் வான் படை பிரிவு தலைமை கமாண்டர் அசம் அபு ரகபா உட்பட ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும் ஹமாஸின் 150 சுரங்கப் பாதைகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தின. இதில் காசா பகுதியின் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் முழுமையாக தகர்க்கப்பட்டன.
இதுதொடர்பாக ஐ.நா. சபையின் உலக உணவு திட்ட அமைப்பின் தலைவர்சிண்டி மெக்கைன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தொலைத்தொடர்பு, இணைய சேவை முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. அங்கு பணியாற்றும் எங்களது ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. காசாவில் பணியாற்றும் ஐ.நா. சபை ஊழியர்கள், தன்னார்வலர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது" என்று தெரிவித்தார்.
தரைவழி தாக்குதல் தொடக்கம்: இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “வடக்கு காசா பகுதியில் முதல்கட்ட தரைவழி தாக்குதலை தொடங்கிவிட்டோம். வடக்கு காசாவில் வசிக்கும் மக்கள் உடனடியாக தெற்கு காசாவுக்கு செல்லுமாறு அறிவுறுத்துகிறோம். அடுத்த சில நாட்களில் வடக்கு காசாவில் தரை, கடல், வான் வழியாக மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும். ஹமாஸ் தீவிரவாதிகள் கொரில்லா பாணியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நாங்களும் அதே பாணியில் தாக்குதல் நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தன.
எகிப்து அதிபருடன் மோடி பேச்சு: பிரதமர் நரேந்திர மோடி நேற்று எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசியுடன் தொலைபேசியில் பேசினார். இரு தலைவர்களும் காசா போர் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து எகிப்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் அகமது கூறும்போது, “காசா போர், அதன் பின்விளைவுகள், உயிரிழப்புகள் குறித்து இந்திய பிரதமர் மோடியும் எகிப்து அதிபர் சிசியும் விவாதித்தனர். காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் அமல் செய்யப்பட வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இந்தியா, எகிப்து இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT