

ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதால், இதனை சரிசெய்ய அதிக செலவு ஆகும் என இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) தெரிவித்திருக்கிறார்.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, கடந்த 7-ம் தேதியன்று இஸ்ரேல்மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, ஹமாஸ் மீது எதிர்த் தாக்குதல் தொடுப்பதாகப் காசாவில் தொடர்ந்து அதிரடி தாக்குதல் நடத்திவருகிறது இஸ்ரேல். ஹமாஸ் மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலால் அப்பாவி பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், "இஸ்ரேலுக்கு ஒரு நாளைக்கு சுமார் 1 பில்லியன் ஷேக்கல்கள் ($246 மில்லியன்) போருக்கான நேரடிச் செலவு" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதால், இதனை சரி செய்ய அதிக செலவு ஆகும். இதனால் காசா போரைக் கருத்தில் கொண்டு 2023 - 2024 தேசிய வரவு செலவுத் திட்டம் இனி பொருந்தாது. அந்தத் திட்டம் திருத்தியமைக்கப்படும்'' என்றார்.