Published : 25 Oct 2023 04:50 AM
Last Updated : 25 Oct 2023 04:50 AM
புதுடெல்லி: இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜோர்டான் மன்னரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர சர்வதேச அளவில் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்என்று வலியுறுத்தினார். இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சந்தித்து பேசினார். இஸ்ரேல் எல்லையில் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா நகரில் இருந்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் போரை அறிவித்து காசா பகுதிக்குள் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜோர்டான் மன்னர் 2-ம் அப்துல்லாவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.
தீவிர ஆலோசனை: அப்போது, தீவிரவாதம், வன்முறை தாக்குதல்கள் குறித்த வருத்தம், வேதனையை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். காசாவில் மோசமடைந்து வரும் சூழலை தடுப்பது குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கும், தாக்குதல்களில் இருந்து அப்பாவி மக்கள்,மருத்துவமனைகளை பாதுகாப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கும் விதமாக சர்வதேச முயற்சிகளை முடுக்கிவிடுவதன் அவசியம் குறித்தும் அவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக அளவில் மருத்துவ, நிவாரண உதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்தும் பிரதமர் மோடி அப்போது வலியுறுத்தினார்.
பைடனை சந்திக்க மறுத்த மன்னர்: காசாவில் உள்ள மருத்துவமனை மீது கடந்த 17-ம் தேதி இரவு ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. இதில் சுமார் 500 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் தீவிரவாதிகள் ஆகிய இரு தரப்பும் இத்தாக்குதலுக்கு பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டன. அங்கு விழுந்த ராக்கெட்கள், தங்களுடையது அல்ல என்று இஸ்ரேல் ராணுவம் மறுப்பு தெரிவித்த நிலையில், இஸ்ரேல்தான் காரணம் என ஹமாஸ் தீவிரவாதிகள் குற்றம்சாட்டினர். இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பை ஜோர்டான் மன்னர் கடந்த வாரம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
சமாதான ஒப்பந்தம்: இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் அண்டை நாடான ஜோர்டான், மேற்குகரையுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. கடந்த 1994-ல் இஸ்ரேலுடன் ஜோர்டான் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அந்த வகையில், இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் ஜோர்டானின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. தவிர, ஜோர்டானில் பாலஸ்தீனர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் மையப் புள்ளியான ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா மசூதியின் அதிகாரப்பூர்வ பாதுகாவலராகவும் ஜோர்டான் இருந்து வருகிறது.
பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை: இப்போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் சமீபத்தில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டனர்.
அந்த வரிசையில், பிரான்ஸ் அதிபர்இமானுவேல் மேக்ரான் நேற்று இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு சென்று, அதிபர் ஐசக், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தனித்தனியாக சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்: தீவிரவாதத்துக்கு எதிராக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு பக்கபலமாக பிரான்ஸ் இருக்கும். ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள பிணை கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்ரேல் எல்லை பகுதியில் நடத்தி வரும் தாக்குதலை ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு: யூதர்களை மட்டுமின்றி, மத்திய கிழக்கு, ஐரோப்பா என ஒட்டுமொத்த உலகத்தையும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டுகிறது. புதிய நாஜி படையாக அவர்கள் உருவெடுத்துள்ளனர். காசா பகுதியில் இருந்து அவர்கள் வேரறுக்கப்படுவார்கள். பிணை கைதிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். போரில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஐ.நா. பொதுச் சபை நாளை கூடுகிறது
இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சினை குறித்து விவாதிக்கும் வகையில் ஐ.நா. பொதுச் சபையின் அவசர கூட்டம் நாளை நடைபெறுகிறது.
இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையிலான போரால் அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பலமுறை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டும், அனைத்தும் தோல்வி அடைந்தன.
இந்த சூழலில், ஐ.நா. பொதுச் சபையின் அவசர கூட்டம் நாளை நடைபெறுகிறது. ரஷ்யா, இந்தோனேசியா, வங்கதேசம், மலேசியா, மாலத்தீவு, பாகிஸ்தான், வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கோரிக்கையை ஏற்று இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக ஐ.நா. பொதுச் சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பொதுச் சபையின் 39-வது அமர்வில், 10-வதுஅவசர கூட்டம் அக்.26-ம் தேதி நடைபெறுகிறது. இதில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் மத்திய கிழக்கு பிராந்திய இயக்குநர் ரிக் நேற்று கூறியபோது, ‘‘காசாவின் வடக்கு பகுதி மட்டுமன்றி மத்திய, தெற்கு பகுதி மருத்துவமனைகளிலும் எரிபொருள், மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதே நிலை நீடித்தால் நோயாளிகளின் உயிரிழப்பு கணிசமாக அதிகரிக்கும். எனவே, எரிபொருள், மருந்துகள் விநியோகத்துக்கு அனைத்து தரப்பினரும் அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றார். ஐ.நா. சபையின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தமரா அல்ரிபாய் கூறும்போது, “எகிப்தின் ரஃபா எல்லை வழியாக அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் போதாது. கூடுதல் நிவாரண பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுகிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT