

டெல் அவிவ்: வடக்கு காசாவில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 220 இஸ்ரேலியர்கள் சிறைபிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இருதரப்புக்கும் இடையே நேற்று 16-வது நாளாக போர் நீடித்தது. இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களில் காசாபகுதியில் இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 14,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அடுத்த கட்டமாக வடக்கு காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.
இதற்காக வடக்கு பகுதியில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் என்று கடந்த 12-ம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி சுமார் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு இடம்பெயர்ந்தனர். சுமார் 3.5 லட்சம் பேர் வடக்கு காசாவில் தொடர்ந்து தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் வடக்கு காசாவில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் வடக்கு காசா பகுதிகளில் நேற்று துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டன. அதில், "வடக்கு காசாவில் இருந்து வெளியேறாவிட்டால் ஹமாஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்றே கருதப்படுவர். வடக்கு காசாவில் வசிப்போரின் பாதுகாப்புக்கு எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எகிப்தின் ரஃபா எல்லை வழியாக நேற்று முன்தினம் 20 லாரிகளில் காசாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. தற்போது காசா பகுதி மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் பலமடங்கு தீவிரப்படுத்தி இருப்பதால் நிவாரண பொருட்களை அனுப்பும் பணி பாதிக்கப்பட்டு இருக்கிறது.
ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜோனத்தான் கூறும்போது, “காசா பகுதி மருத்துவமனைகளில் 120 குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு உள்ளன. மின்சாரம், எரிபொருள் இன்றி இந்த குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது" என்று தெரிவித்தார்.
பாலஸ்தீன சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களில் இதுவரை 1,700 குழந்தைகள் உயிரிழந்துள்ளன" என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.