

மின் கட்டணம்: முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு: சென்னை மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள சிறு அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணம், ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாயில் இருந்து5 ரூபாய் 50 காசுகள் வரை குறைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிக்கு இடைக்கால ஜாமீன்: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாஷாவுக்கு மூன்று மாதம் காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு: மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம், 42 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்கிறது.
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சவை ஒப்புதல் அளித்துள்ளது.
லேகோ பைலட்டுகள், ரயில்வே கார்டுகள், ரயில் நிலைய மேலாளர், கண்காணிப்பாளர், தொழில்நுட்ப நிபுணர்கள், உதவியாளர்கள் மற்றும் 'சி' பிரிவு ஊழியர்கள் உள்ளிட்ட 11.07 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ரூ.1,968 புள்ளி 87 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பட்டாசு ஆலை விபத்து: ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு போராட்டம்: சிவகாசி அருகே ரெங்கபாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த அழகாபுரியை சேர்ந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரி ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரியில் புதன்கிழமை காலை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு: மருது சகோதரர்கள் குருபூஜை, தேவர் குருபூஜை போன்ற நிகழ்வுகள் இருப்பதால் மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், ஊர்வலத்துக்கு அனுமதி கோரியுள்ள பிற மாவட்டங்களில் ஊர்வலம் நடத்தலாம். சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளைப் பின்பற்றி ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுமுகத் தீர்வு - ரிலீஸ் ஆகிறது ‘லியோ’: விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் சிக்கல் இருந்த நிலையில், பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகத் தீர்வு எட்டப்பட்டு ரோகிணி உள்ளிட்ட திரையரங்குகளில் வியாழக்கிழமை ‘லியோ’ திரைப்படம் வெளியாகிறது.
‘அதானி விவகாரத்தில் சரத் பவாரிடம் கேள்வி கேட்காதது ஏன்?’: “தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், இந்தியாவின் பிரதமர் இல்லை. அவர் அதானியை பாதுகாக்கவும் இல்லை. அதனால் அவரிடம் அதானி பற்றி கேட்க முடியாது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், அதானியின் மர்மமான நிலக்கரி இறக்குமதி குறித்து ஃபைனான்சியல் டைம்ஸ்-ல் வந்த கட்டுரையை மேற்கோள் காட்டி, நாட்டில் அதானியால் மின்சார கட்டணம் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
500 பேர் படுகொலை - காசா மருத்துவமனையை தாக்கியது யார்?:கடந்த 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - இமாஸ் மோதல், 12-வது நாளை எட்டியுள்ள நிலையில், காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்துவிட்டதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த வான் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என ஹமாஸ், பாலஸ்தீனம் மற்றும் பிற நாடுகள் சிலவும் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் என்ற அமைப்பே இதற்குக் காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே, பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியுற்று தவறுதலாக காசாவின் அல்-அஹ்லி மருத்துவமனை மீது தாக்கியுள்ளது எனக் கூறியுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை, தாக்குதலுக்கு முன்பும், பின்பும் மருத்துவமனையின் காட்சிகள் என்று கூறி ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!: இஸ்ரேல் - ஹமாஸ் போரை அடுத்து, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவுக்கு வந்துள்ளார். அவருக்கு விமான நிலையம் சென்று இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்பு அளித்தார். இதன்பின் இரு தலைவர்களும் போர் தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஜோ பைடன், “காசா மருத்துவமனை மீதான தாக்குதலால் நான் மிகுந்த வேதனையும், அதேநேரம் கோபமும் அடைந்துள்ளேன். நான் பார்த்தவரையில் மருத்துவமனை தாக்குதலை இஸ்ரேல் செய்யவில்லை. மாறாக, வேறொரு குழு இதை செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், ஹமாஸ் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என்றும் அவர் உறுதி அளித்தார்.