

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் ஒரு ஹோட்டலில் நேற்று இரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டுப் பயணி உள்ளிட்ட 6 பேர் பலியானார்கள்.
ராணுவத்தினர் நடத்திய பதிலடியில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காபுல் நகரில் புகழ்பெற்ற இன்டர்கான்டினென்டல் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்குள் நேற்று இரவு தானியங்கி துப்பாக்கிகள், உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 4 தீவீரவாதிகள் உள்ளே புகுந்தனர்.
அந்த ஹோட்டலில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பலரை பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்து மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, ராணுவத்தினர் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஹோட்டலைச் சுற்றிவளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்தனர்.
தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு, ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இன்று காலைவரை துப்பாக்கி சண்டை நீடித்த நிலையில், அந்த 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதேசமயம், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு வெளிநாட்டுப் பயணி உள்ளிட்ட 6 பேர் பலியானார்கள்.
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நஜீப் டேனிஷ் கூறுகையில், ''ஹோட்டலில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் 4 பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இரு தரப்புக்கும் நேற்று இரவு முதல் நீடித்த துப்பாக்கி சண்டை இன்று காலை வரை நீடித்தது. ஹோட்டலில் இருந்த 41 வெளி நாட்டினர் உள்ளிட்ட 150 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதேசமயம், துப்பாக்கி சூட்டில் ஒரு வெளிநாட்டு பெண் பயணி, ஆப்கான் நாட்டைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர்.
ஏராளமான பயணிகள் ஹோட்டலின் மாடியில் இருந்து பெட்ஷீட் மூலம் கீழே இறங்க முயற்சித்து விழுந்து காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும பொறுப்பு ஏற்கவில்லை.''
இவ்வாறு நஜீப் டேனிஷ் தெரிவித்தார்.