

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய வான்வழி தாக்குதல்களில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் 2 மூத்த கமாண்டர்கள் கொல்லப் பட்டனர்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று 8-வது நாளாக போர் நீடித்தது. ஹமாஸ் தீவிரவாதிகளின் வான்வழி தாக்குதல் பிரிவின் தளபதியாக முராத் அபு என்பவர் செயல்பட்டு வந்தார். அவர் காசா நகரில் உள்ள ஹமாஸ் முகாமில் இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. அந்த முகாமை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இதில் முராத் அபு உட்பட ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பில் நுக்பா என்ற படைப் பிரிவு உள்ளது. இந்த பிரிவை சேர்ந்த தீவிரவாதிகளே கடந்த 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து கொடூர தாக்குதல்களை நடத்தினர்.
நுக்பா பிரிவின் கமாண்டராக செயல்பட்ட அலி என்பவர் காசாவின் ரகசிய இடத்தில் இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அலி கொல்லப்பட்டார்.
இதுகுறித்து இஸ்ரேலிய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இதுவரை வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறோம். அடுத்தகட்டமாக காசாவின் வடக்குப் பகுதியில் தரைவழி தாக்குதலை தொடங்க உள்ளோம். அப்போது காசா பகுதிகளில் முகாமிட்டிருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள். அவர்களின் அனைத்து கட்டமைப்புகளும் தரைமட்டமாக்கப்படும். குறிப் பாக அவர்களின் சுரங்க நகரம் தகர்க்கப்படும்.
ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் எல்லைப் பகுதி களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் தாக்குதலை அந்த நாட்டு அரசு தரப்பின் தாக்குதலாகவே கருதுவோம். இவ்வாறு இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.