Published : 10 Oct 2023 06:23 AM
Last Updated : 10 Oct 2023 06:23 AM
புதுடெல்லி: இந்த ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசுக்கு பேராசிரியை கிளாடியா கோல்டின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கு குறித்த விரிவான ஆராய்ச்சிக்காக அவருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் மக்கள் பயனடையும் வகையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் 5 துறைகளுக்கான பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வரும் கிளாடியா கோல்டின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ராயல் ஸ்வீடிஸ் அகாடமி ஆப் சயின்சின் பொதுச் செயலர் ஹான்ஸ் எலெக்ரென் நேற்று அறிவித்தார். பெண் தொழிலாளர் சந்தையின் விளைவுகளைப் பற்றிய மேம்பட்ட புரிதலுக்காக அவர் இந்த பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டதாக நோபல் தேர்வு குழு தெரிவித்துள்ளது.
உலகளாவிய தொழிலாளர் சந்தையில் பெண்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். மேலும், அவர்களின் உழைப்பிற்கான ஊதியம் என்பது ஆண்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இதுதொடர்பாக கோல்டின், 200 ஆண்டுகளுக்கும் மேலான தரவுகளை சேகரித்து, வருமானம் மற்றும்வேலைவாய்ப்புகளில் பாலின வேறுபாடுகளின் முக்கிய ஆதாரங்களைவெளிப்படுத்தியுள்ளார்.
200 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்களின் சந்தையில் பெண்களின் பங்கு மேல் நோக்கி செல்லவில்லை என்பதையும், அதற்கு பதிலாக யு-வடிவ வளைவை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தனது ஆய்வில் நிறுவியுள்ளார்.
திருமணமான பெண்களின் பங்கேற்பு 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் விவசாய சமூகத்திலிருந்து தொழில் துறை சமூகமாக மாறியதுடன் குறைந்தது. ஆனால், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேவை துறை வளர்ச்சியுடன் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கத்தொடங்கியதாக கிளாடியா கோல்டின் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
வீடு மற்றும் குடும்பத்துக்கான பெண்களின் பொறுப்புகள் தொடர்பான சமூக விதிமுறை மற்றும் கட்டமைப்புகளின் விளைவுகளை வைத்து கோல்டின் இந்த முறையை விளக்கியுள்ளார்.
பொருளாதார துறைக்கான விருது 1968-ல் ஸ்வீடனின் மத்திய வங்கியால் உருவாக்கப்பட்டது. இது, ஆல்பிரட் நோபலின் நினைவாக பொருளாதார அறிவியலுக்கான பேங்க் ஆப் ஸ்வீடன் பரிசு என்றும் அழைக்கப்படுகிறது.
6 துறைகளில் தேர்வானவர்களுக்கு ஆஸ்லோ மற்றும் ஸ்டாக்ஹோமில் டிசம்பர் மாதம் நடைபெறும் விழாவில் நோபல் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. ரொக்க பரிசாக ரூ.8.3 கோடியும், 18 காரட் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
இதுவரை பொருளாதார நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட 92 பேரில் இருவர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT