போரில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளோம்: இஸ்ரேல் ராணுவம் - காசா பலி 313 ஆக அதிகரிப்பு

போரில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளோம்: இஸ்ரேல் ராணுவம் - காசா பலி 313 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

டெல் அவிவ்: போரில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளோம் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று (சனிக்கிழமை) இஸ்ரேலை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள் பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது குண்டுமழை பொழிந்தன.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் இரு தரப்புக்கும் இடையே கடும் தாக்குதல் நடந்து வருகின்றனர். கடும் போரினால் காசா பகுதியில் மட்டும் 313 பேர் உயிரிழந்துள்ளனர். 1700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை பாலஸ்தீன ராணுவமும் உறுதி செய்துள்ளது.

இதற்கிடையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், "இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்கவும். தேவைப்படின் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவும். ஏற்கெனவே அரசு இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் " என்றார்.

அதேபோல் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்கள் உதவி தேவைப்படின் இந்தியப் பிரதிநிதித்துவ அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் வரும் 14 ஆம் தேதி இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் செல்லும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

‘ஆபரேஷன் அல்-அக் ஷா ஃபிளட்’ இஸ்ரேல் மீது அரபு நாடுகள் கடந்த 1973-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தின. அன்றைய தினம் யூதர்களின் காலண்டரில் மிகவும் புனிதமான நாள் ஆகும். இந்த தாக்குதலின் 50-ம் ஆண்டை முன்னிட்டு நேற்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

‘ஆபரேஷன் அல்-அக் ஷா ஃபிளட்’ என்ற பெயரில் தாக்குதலை தொடங்கிய ஹமாஸ் தீவிரவாதிகள் சுமார் 20 நிமிடங்களில் இஸ்ரேலை நோக்கி 5,000 ராக்கெட் குண்டுகளை வீசினர். இந்த குண்டுகள் இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் விழுந்து வெடித்தன. இஸ்ரேலின் ஆஸ்கெலான் கடற்கரை நகரில் பல வாகனங்கள் ராக்கெட் குண்டு வீச்சில் தீப்பற்றி எரிந்தன. இதையடுத்து ஜெருசலேம் நகரில் போர் எச்சரிக்கை விடுக்கும் அபாய ஒலிகள் ஒலிக்கப்பட்டன. காசா எல்லை அருகே வசிக்கும் மக்கள் வீட்டுக்குள் இருக்கும்படியும், பாதுகாப்பான இடங்களில் தங்கும்படியும் இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியது.

தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையில் மிகக் கடுமையான போர் மூண்டுள்ளது. இந்தப் போரில் வெற்றி நிச்சயம் என நேற்றைக்கே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறிய நிலையில் உலகமே இந்தப் போரை உற்று நோக்கி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது இந்திய அரசு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in