யுத்தக் களமான இஸ்ரேல் முதல் டிடிஎஃப் வாசன் லைசன்ஸ் ரத்து வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.7, 2023

யுத்தக் களமான இஸ்ரேல் முதல் டிடிஎஃப் வாசன் லைசன்ஸ் ரத்து வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.7, 2023
Updated on
3 min read

இஸ்ரேல் நகருக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் சனிக்கிழமை காலை தொடங்கி திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் நான்கு சக்கர வாகனங்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு இளைஞரும் கைகளில் நவீன ரக துப்பாக்கிகளை ஏந்தியவாறு சாலைகளில் சுற்றித் திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

அதோடு, ஏவுகணைகளைக் கொண்டும் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சனிக்கிழமை காலை 8 மணி தொடங்கி 2 மணி நேரத்தில் இஸ்ரேல் முழுவதும் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் துளைத்தெடுத்தன. சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் தேசமும், தேச மக்களும் அதிர்ச்சிக்கு உள்ளான சூழலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்.

இந்தத் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் இஸ்ரேல் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டு. ஹமாஸுக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறிவருகிறது.

‘யுத்தம் செய்கிறோம்’ - இஸ்ரேல் பிரதமர் பிரகடனம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறுகையில், "நாங்கள் யுத்தம் செய்கிறோம். அதில் நாங்களே வெல்வோம். எங்களின் எதிரி யோசித்துப் பார்த்திராத விலையைக் கொடுக்க நேரிடும்" என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பு ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டு வீரர்களை பிணையாகப் பிடித்து வைத்துள்ளதாகவும் கூறியது. சனிக்கிழமை மதியம் வரை பொதுமக்களில் 22 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் நாட்டின் மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் உறுதி செய்துள்ளது.

இஸ்ரேல் மீதான தாக்குதல்: பாலஸ்தீன அதிபர் கருத்து: பாலஸ்தீனத்துக்குள் அத்துமீறி குடியேறுபவர்களுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் துருப்புகளின் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை என்பது பாலஸ்தீனியர்களுக்கு உண்டு என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை அடுத்து பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டதாகவும், அதில் பாலஸ்தீன மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், பாலஸ்தீன மக்களின் உறுதியை வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவு: பிரதமர் மோடி: இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடினமான இந்த நேரத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

“பாஜகவுக்கு இண்டியா கூட்டணி உண்மையான சவால்”: இண்டியா கூட்டணி, பாஜகவுக்கு உண்மையான ஒரு சவால் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு - 100 பதக்கங்களைக் கடந்து இந்தியா சாதனை: நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது இந்தியா. ஆடவர் கபடி பிரிவில் சர்ச்சை, குழப்பத்துக்குப் பிறகு இந்தியா தங்கம் வென்றது. காலை நடந்த மகளிர் கபடி, வில்வித்தை ஆடவர் மற்றும் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம் இந்தியா 28 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கல பதக்கம் என மொத்தமாக 103 பதக்கங்களை வென்று 4-ஆவது இடத்தில் உள்ளது.

அக்.11-ல் தமிழக டெல்டா மாவட்டங்களில் பந்த் அறிவிப்பு: தஞ்சாவூரில் திமுக விவசாய அணி மற்றும் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், திமுக விவசாய அணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், கர்நாடகாவில் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும், வரும் 11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ராஜஸ்தானில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” - முதல்வர் கெலாட்: ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிஹாரைப் போல ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

“இந்தியா உடன் மோதல் வேண்டாம்” - கனடாவுக்கு இங்கிலாந்து ஆலோசனை: இந்தியா உடனான மோதல் போக்கை தவிர்க்குமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா மீது குற்றம்சாட்டிய விவகாரத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு அளிக்க மறுத்துவிட்டன. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உள்ளார்.

தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால், யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் ஒரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இந்த ரத்து 2033 வரை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in