Published : 15 Dec 2017 10:54 AM
Last Updated : 15 Dec 2017 10:54 AM

புழல் சிறையில் பாம்பு, எலியெல்லாம் இருக்கு! லண்டன் நீதிமன்றத்தில் மல்லையாவுக்காக வாதம்

லண்டன் நீதிமன்றத்தில், மல்லையாவை இந்தியா அழைத்து வருவது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, சென்னை புழல் சிறையின் மோசமான நிலை குறித்து, வாதம் முன் வைக்கப்பட்டது.

பாம்புகள், எலிகள், கரப்பான்களுக்கு நடுவே மருத்துவம், உணவு வசதியின்றி அவதிப்படும் சூழலில், 2013ம் ஆண்டு சென்னை புழல் சிறையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 6 பேர் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு மத்திய அரசு இங்கிலாந்து அரசை கேட்டுக்கொண்டது. இந்தியா அளித்த புகாரின் பேரில் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இந்த ஆண்டு தொடக்கத்தில் மல்லையாவை கைது செய்தனர். பின்னர் 6,50,000 யூரோ பிணைத்தொகை செலுத்தியதன் அடிப்படையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் மனு மீதான விசாரணை, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளாரே மாண்ட்கோமெரி, இந்தியாவில் உள்ள சிறைகளின் நிலைமை குறித்தும், அங்கு கைதிகளை நடத்தும் விதம் குறித்தும் வாதங்களை எடுத்து வைத்தார்.

மேலும், ஐரோப்பிய யூனியனுக்கான கைதிகள் சித்திரவதைக்கு எதிரான அமைப்பின் உறுப்பினரான ஆலன் மிச்சேல் இந்த வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது, கடந்த 2013ம் ஆண்டு இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட 6 இங்கிலாந்து நாட்டினர் மற்றும் 29 பிற நாட்டினர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்களில் ஒருவரை, தாம்  சந்தித்து திரட்டிய விவரங்களை மிச்சேல் எடுத்துரைத்தார்.

இதுகுறித்து மிச்சேல் கூறுகையில், ‘‘புழல் சிறையில் எலிகள், கரப்பான் பூச்சிகள், பாம்புகளுடன் வாழ்ந்ததையும், மிகச்சிறிய அறையில் மிகமோசமான நிலையில் இருக்க நேர்ந்ததையும் அவர் என்னிடம் கூறினார். மேலும், உணவும், மருத்துவு சிகிச்சையும் கிடைக்காமல் அவதிப்பட்டதையும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்து தரப்படாதது பற்றியும் தெரிவித்தார். இதுபோலவே மும்பை ஆர்தர் ரோடு சிறையிலும், அலிப்பூர் சிறையிலும் மோசமான நிலை இருப்பதையும் அறிய முடிகிறது’’ எனகூறினார்.

இதை தொடர்ந்து வழக்கறிஞர் கிளாரே மாண்ட்கோமெரி கூறுகையில் ‘‘எனவே தான், இந்தியாவுக்குச் செல்வதற்கு விஜய் மல்லையா தயக்கம் காட்டுகிறார். சர்க்கரை நோயாளியான அவர் சிறையில் அடைக்கப்பட்டால் உரிய சிகிச்சையும், மருத்துவ உதவியும் கிடைக்காமல் போகக்கூடும் என்ற கவலை உள்ளது’’ என  வாதங்களை வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x