Published : 02 Oct 2023 06:13 PM
Last Updated : 02 Oct 2023 06:13 PM

மருத்துவத்துக்கான நோபல் பரிசு | கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு காரணமான காடலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் தேர்வு

காடலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன்

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): எம்ஆர்என்ஏ (messenger RNA) கோவிட் 19 தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாகக் கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக 2023 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கடாலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் இருவருக்கும் கூட்டாக வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை ராயல் ஸ்வீடிஸ் அகாடமி இன்று (அக்.2) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தங்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள் மூலமாக, நமது நோய் எதிர்ப்பு சக்தியில் எம்ஆர்என்ஏ எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய அடிப்படை புரிதலை மாற்றியமைத்துள்ள பரிசு பெற்றவர்கள், நவீன காலத்தில் மனித ஆரோக்கியத்துக்கான அச்சுறுத்தலுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முன்னோடியில்லாத பங்களிப்பினை செய்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் வேதியியலாளரான கடாலின் கரிகோ, எம்ஆர்என்ஏயின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டார் என்றாலும், அவர் நோயெதிர்ப்பியல் நிபுணரான ட்ரூவ் வைஸ்மேன் உடன் இணைந்து நியூக்லியோசைடின் பாதிப்பும், நோய் எதிர்ப்பு அமைப்பில் அதன் தாக்கம் குறித்தும் கடந்த 2005-ல் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். பின்னர் 2008, 2010ம் ஆண்டுகளில் வெளியான மேலும் சில ஆய்வுக்கட்டுரைகள் ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகளை சரிசெய்ய உதவியது. இதன் மூலம் எம்ஆர்என்ஏவை மருத்துவ ரீதியாக பயன்படுத்துவதில் இருந்த முக்கியமான தடைகள் நீங்கின.

இதன் மூலம், மனித ஆரோக்கியத்துக்கான அச்சுறுத்தலாக விளங்கிய கோவிட் 19-க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்த இணை முன்னோடியில்லாத பங்களிப்பை செய்துள்ளதாக நோபல் பரிசு குழுவின் நடுவர் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த இணையை கவுரவிக்கும் வகையில், ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் கமிட்டி மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு இருவரையும் தேர்வு செய்துள்ளது. பரிசு பெற உள்ள அறிவியல் கண்டுபிடிப்பு 2005ம் ஆண்டைச் சேர்ந்தது என்றாலும், கோவிட் 19க்கு எதிராக ஃபைசர்/பையோடெக் மற்றும் மடேர்னாவால் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணிபுரியும் ஹங்கேரியைச் சேர்ந்த கரிகோவும், அமெரிக்காவைச் சேர்ந்த வைஸ்மேனும் தங்களின் ஆராய்ச்சிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளனர். இதில் 2021ம் ஆண்டு பெற்ற லஸ்கர் விருது நோபல் விருத்துக்கு இணையாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் விஞ்ஞானியான ஸ்வாண்டே பாபோவின் அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமத்தின் கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டது. இவரது கண்டுபிடிப்பு முற்றிலும் புதிய துறையான பலியோஜெனோமிக்-ல் மனித பரிணாமம் மற்றும் இடம்பெயர்வு குறித்து ஆழமாக புரிந்து கொள்ள அறிவியல் சமூகத்துக்கு உதவியது.

இந்தாண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலமாக நோபல் பரிசு அணிவகுப்பு தொடங்கியுள்ளது.இயற்பியலுக்கான நோபல் பரிசு அக்.3ம் தேதியும், வேதியியலுக்கான விருது அக்.4- ம் தேதியும், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான பரிசுகள் முறையே அக். 5, 6 மற்றும் 9ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x