

நடுக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 157 பேர் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தமிழக அகதிகள் முகாமைச் சேர்ந்த அவர்கள் விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இலங்கை அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 157 பேர் புதுச்சேரியில் இருந்து கடந்த ஏப்ரல் 13-ம் தேதி படகில் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். அவர்களின் படகு ஜூன் 29-ம் தேதி கிறிஸ்துமஸ் தீவுப் பகுதிக்கு வந்தபோது ஆஸ்திரேலிய கடற்படையினர் தடுத்து நிறுத்தினர்.
ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய அவர்களுக்கு அந்த நாட்டு அரசு தஞ்சமளிக்க மறுத்துவிட்டது. அவர்கள் அனைவரும் நடுக்கடலில் ஆஸ்திரேலியாவின் சுங்கத் துறை கப்பலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் ஸ்காட் மோரிசன் டெல்லி வந்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் இலங்கை அகதிகளை திரும்ப அழைத்துக் கொள்ள இந்திய அரசு உறுதிஅளித்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அமைச்சர் ஸ்காட் மோரிசன், மெல்போர்ன் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த பிரச்சினையில் இந்திய அரசு மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் திரும்ப அழைத்துக் கொள்ள அந்த நாடு முன்வந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் இந்திய தூதரகத்தால் அடையாளம் காணப்படுவார்கள். அதைத் தொடர்ந்து அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
157 இலங்கைத் தமிழர்களும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும்வரை அவர்கள் மேற்கு ஆஸ்திரேலிய பகுதியில் உள்ள கர்டின் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.