

புதிய அரசு அமைப்பது பற்றிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இராக் நாடாளுமன்றம் வரும் 13-ம் தேதி கூடுகிறது. இதற்கு அந்நாட்டு அரசியல்வாதிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற கூட்டம் கூடுவது ஆகஸ்ட் வரை தள்ளிவைக்கப்படும் என முன்னர் முடிவெடுத்திருந்தது திடீரென மாற்றப்பட்டது எப்படி என்பது தெரியவில்லை.
கடந்தவாரம் கூடிய நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக புதிய சபாநாயகர் தேர்வு நடைபெறவில்லை. தமது அரசமைப்புச் சட்ட கடமையை நிறைவேற்ற முடியாமல் போகவே அடுத்து ஆகஸ்ட் 12-ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என எம்பிக்கள் அறிவித்தனர். இந்த நடவடிக்கை, இராக் மக்களை வெகுவாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலக அளவிலும் பெரும் கண்டனம் எழுப்பியது.
இரு மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில், பிரதமர் நூர் அல் மாலிகி கூட்டணி அதிக இடங்களில் வென்றது. எனினும் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.