

சீனாவில் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர், 8 பேர் காயமடைந்தனர்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் சாவோயாங் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை இந்த விபத்து நடந்தது.
இதுகுறித்து சாவாயோங் மாவட்ட தீயணைப்புத் துறை, "ஷிபாலிடியான் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது. உடனடியாக அங்கு விரைந்தோம். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், 5 பேர் பலியாகினர்.காயமடைந்த 8 பேரும் ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்நிலை ஆய்வில், சார்ஜில் இடப்பட்டிருந்த இ-சைக்கிள் ஒன்றிலிருந்து கிளம்பிய புகையால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது" எனத் தெரிவித்துள்ளது.
தொடரும் விபத்துகள்.. அச்சத்தில் மக்கள்..
கடந்த சில வாரங்களில் பெய்ஜிங் நகரில் நடைபெறும் இரண்டாவது தீ விபத்து இதுவாகும். கடந்த நவம்பர் 19-ம் தேதியன்று ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியாகினர். 8 பேர் கொல்லப்பட்டனர்.
இதேபோல் சீனாவின் மற்றுமொரு பிரபலமான பகுதியான குவான்டாங் மாகாணத்தில், கடந்த 10-ம் தேதி ஒரு குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்.
டிசம்பர் 1-ம் தேதியன்று டியான்ஜின் பகுதியில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகினர்.
சமீபகாலமாக சீனாவில் பெருகிவரும் தீ விபத்துகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.