

இந்தியா மீது தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற இலங்கை தமது மண்ணை ஒருபோதும் அனுமதிக்காது என தெரிவித்தார் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபக்சே.
டெய்லி மிரர் பத்திரிகைக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கோத்தபய கூறியதாவது:
இலங்கையில் வளர்ந்துவரும் இஸ்லாமிய தீவிரவாதம் இந்தியாவுக்கு எதிராக பாயும் வாய்ப்பு இருப்பதாக இந்திய உளவு அமைப்புகள் என்னிடம் தெரிவித்தன. இந்த உளவுத் தகவலை நாங்கள் ஆய்வு செய்தோம். இந்தியா தெரிவிக்கும் அச்சத்தில் உண்மை இருப்பதாக கருதவில்லை.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தின்போது பொது பல சேனா உள்ளிட்ட எந்த அமைப்புகளுக்கும் எனது ஆதரவு இல்லை. எனக்கு தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் நான் பதவியிலிருந்து விலகத் தயார்.
அச்சுறுத்தல்களை ஒடுக்க எந்த அமைப்பையும் உருவாக்க அவசியம் இல்லை. பிரச்சினை ஏற்பட்டால் அதை சமாளிக்க போதிய ஆற்றல் உள்ளது. இன, மத நோக்கில் செயல்படும் அமைப்புகள் பொது பல சேனா போன்று நிறைய உள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பு புதிதாக உருவெடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை இலங்கை முறியடித்தது என்றார் கோத்தபய. தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழு சதித் திட்டம் தீட்டியதாக வெளியான தகவல் பற்றி இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சதித்திட்டம் இலங்கை, மலேசியா, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளில் வகுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
சென்னை, பெங்களூரில் உள்ள தூதரகங்களை தகர்க்க இலங்கையில் திட்டமிடப்படுவதாக இந்தியாவை மலேசியா உஷார்படுத்தியது.அதையடுத்து மலேசியா உள்ளிட்ட நாடுகளின் புலனாய்வு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது..