Published : 21 Sep 2023 07:47 AM
Last Updated : 21 Sep 2023 07:47 AM
புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டுக்குப் பிறகு எரிசக்தி, பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, டிஜிட்டல் மயமாக்கல், வர்த்தகம், ஹெல்த்கேர் உள்ளிட்ட துறைகளில் 50 ஒப்பந்தங்கள் இந்தியா - சவுதி இடையில் கையெழுத்தாகியுள்ளன.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் அல் சவுத், பிரதமர் மோடியுடன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையின் விளைவாக நிலுவையில் உள்ள பழைய திட்டங்களையும் விரைந்து முடிக்க இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேற்கு கடற்கரை சுத்திகரிப்பு திட்டங்களை விரைந்து முடிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக 100 பில்லியன் டாலரை முதலீடு செய்வதெனவும், இதற்காக ஒரு கூட்டுப்பணிக்குழுவை உருவாக்குவதெனவும் இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா இடையே வர்த்தக வழித்தடத்தை (ஐஎம்இசி) உருவாக்க இந்தியாவும், சவுதியும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த திட்டம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு (பிஆர்ஐ) கடும் போட்டியாக அமையும்.
பெல்ட் அண்ட் ரோடு திட்டம் சீன மக்களுக்கும், சீன நிறுவனங்களுக்கு மட்டுமே லாபம்தரும் ஆனால், ஐஎம்இசி திட்டமானது ஆசியா, அரேபியா, ஐரோப்பியா இடையே பொருளாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கம் கொண்டது.
டிஜிட்டல் இணைப்பு, மின்சாரம் மற்றும் சுத்தமான ஹைட்ரஜன் ஏற்றுமதிக்காக கடலுக்கடியில் கேபிள் பதிப்பதால் ஆசியா- மத்திய கிழக்கு-ஐரோப்பா இடையே பொருளாதார ஒருங்கிணைப்பு மேம்படும். மேலும், பசுமைக்குடில் வாயுவெளியேற்றம் மற்றும் பாதுகாப்பான விநியோகச் சங்கிலிகளை உருவாக்கவும் இது உதவும்.
ஐஎம்இசி திட்டம், ஆசியா-மேற்கு ஆசியா-ஐரோப்பா பிராந்தியங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று இந்தியா மற்றும் சவுதி அரேபியா தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாபக்-அல் ஜோமைஹ் எனர்ஜி நிறுவனம் ஒப்பந்தம்: சென்னையைச் சேர்ந்த வாபக் நிறுவனம் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த அல் ஜோமைஹ் எனர்ஜி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
அல் ஜோமைஹ் எரிசக்தி, நீர் திட்டங்களில் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனத்துடன் இணைந்து பொறியியல், கட்டுமானம் மற்றும் திட்ட மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இணைந்து செயல்படும் வகையில் வாபக் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து வாபக் குழும தலைமை செயல் அதிகாரியும், துணை நிர்வாக இயக்குநருமான பங்கஜ் மல்ஹான் கூறுகையில், ‘‘சவுதி மற்றும் மேற்கு ஆசியாவில் நீர் திட்டங்களில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய இந்த ஒப்பந்தம் உதவும். 2030-க்குள் இலக்குகளை அடைவதற்கு தேவையான ஆதரவை இந்த ஒப்பந்தம் வழங்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT