

சிரியாவின் ஹாம்ஸ் மாகாணத்தில் ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் ரமி அப்துல் ரஹ்மான் கூறியிருப்பதாவது:
ஷார் எரிவாயு படுகைக்குள் நுழைந்த ஐஎஸ் அமைப்பினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்கள், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 25 ஊழியர்கள் உள்ளிட்ட 90 பேரை கொன்று குவித்தனர். பின்னர் அந்தப் படுகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த சம்பவத்தை படம் பிடித்த ஐஎஸ் அமைப்பினர், அதை யூ டியூபில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதில் ஆங்காங்கே சடலங்கள் சிதறிக்கிடந்ததைப் பார்க்க முடிந்தது. பொது மக்களாக இருந்தாலும், வீரர்களாக இருந்தாலும் குற்றம் செய்தவர்களை விசாரணையின்றி கொல்வது போர்க்குற்றமாகும் என ரஹ்மான் தெரிவித்தார்.