குல்பூஷண் ஜாதவின் மனைவி அணிந்து இருந்த ஷூவில் உலோகப் பொருள்: பாகிஸ்தான் விளக்கம்

குல்பூஷண் ஜாதவின் மனைவி அணிந்து இருந்த ஷூவில் உலோகப் பொருள்: பாகிஸ்தான் விளக்கம்
Updated on
1 min read

குல்பூஷண் ஜாதவின் மனைவி அணிந்து இருந்த 'ஷூ'வில் உலோகப் பொருள் இருந்ததாக பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் (47) ஈரானின் சாபஹர் துறைமுகத்தில் வர்த்தகம் செய்து வந்த அவரை பாகிஸ்தான் உளவுத்துறையினர் கைது செய்தனர். உளவு பார்த்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து இந்தியா சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவின் மரண தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் சர்வதேச நிர்பந்தம் காரணமாக ஜாதவை சந்தித்துப் பேச அவரது தாய், மனைவிக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது. அதன்படி, ஜாதவின் தாய் அவந்தி, மனைவி சேத்தன்குல் ஆகிய இருவரும் இஸ்லாமாபாத் சென்று, ஜாதவை கண்ணாடி திரைக்கு வெளியில் இருந்தபடி சந்தித்து விட்டு இந்தியா திரும்பினர்.

குல்பூஷண் ஜாதவை சந்திக்கச் சென்ற அவரது குடும்பத்தினர் துன்புறுத்தப்பட்டதாகவும், அவரது மனைவியின் வளையல், தாலியை பறித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவரது ஷூவை பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. ஆனால் பாகிஸ்தான இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் 'டான்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் வெளியுறுவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் முகமது பைசலின் விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியுள்ளதாவது:

குல்பூஷணின் மனைவி அணிந்திருந்த ஷூ மாறுபட்டு காணப்பட்டதால் அதனை சோதனையிட்டோம். அதில், உலோகம் போன்ற பொருள் இருந்ததால் ஷூவை கழற்றி சோதனை செய்தோம். பாதுகாப்பு காரணங்களுக்காகவே அதைக் கழற்றினோம். அதற்கு பதிலாக அவருக்கு, வேறு ஷூ வழங்கப்பட்டது.  அவரிடம் இருந்து பெறப்பட்ட நகைகள், குல்பூஷணுடனான சந்திப்புக்குப் பின் திருப்பி அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. குல்பூஷண் மனைவியின் ஷூவில் இருந்து உலோகம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குல்பூஷண் ஜாதவின் குடும்பத்தினரை துன்புறுத்தியாக கூறுவது முற்றிலும் தவறு'' எனக் கூறபப்ட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in