

உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் 196 சடலங்களை கண்டெடுத்திருப்பதாக உக்ரைன் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் அரசின் அவசரநிலை சேவையைச் சேர்ந்த 380 பேர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட இடத்தில் தேடுதல் பணியை மேற்கொண்ட போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஆனால் பிரிவினைவாதிகள் உக்ரைன் அரசின் அவசரநிலைச் சேவைப்பிரிவைச் சேர்ந்தவர்களை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாக சி.என்.என். தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
வேண்டுமென்றே விமானம் சுடப்பட்டதா அல்லது தவறான அடையாளத்தினால் இந்தக் கொடுஞ்செயல் நிகழ்ந்துள்ளதா என்று தெரியாத நிலையில் உக்ரைன் அரசு தேடுதல் பணியை தற்போது முடுக்கிவிட்டுள்ளது.
மலேசியா ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய செய்திகளின் படி விமானத்தில் 192 நெதர்லாந்து நாட்டுப் பயணிகள், 44 மலேசிய நாட்டுக்காரர்கள் (15 ஊழியர்கள் உட்பட), 27 ஆஸ்திரேலியர்கள், 10 பிரித்தானியர்கள், 4 ஜெர்மானியர்கள், 4 பெல்ஜியர்கள், 3 பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்கள் மற்றும் கனடா, நியூசிலாந்தைச் சேர்ந்த 2 பேர் ஆகியோர் இருந்துள்ளனர்.
ஐரோப்பிய கூட்டுறவு மற்றும் பாதுகாப்பிற்கான அமைப்பு முன்னதாகத் தெரிவித்த போது, எவ்வளவு உடல்கள் மீட்கப்பட்டன என்பது பற்றிய தகவல்களில் தங்களுக்கு ஐயம் இருப்பதாகக் கூறியிருந்தது. மேலும் உடல்களை மீட்டது யார்? எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது பற்றியும் ஐயங்கள் இருக்கின்றன என்றும் தெரிவித்திருந்தது.
ஆஸ்திரேலியப் பிரதமர் அப்பாட், விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட இடம் எந்த ஒரு ஒழுங்கும் இல்லாமல் உள்ளது, சாட்சியங்களை மறைக்க மீட்புக் குழு பணிகளில் தலையீடு இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.