Published : 30 Aug 2023 06:14 AM
Last Updated : 30 Aug 2023 06:14 AM
பெய்ஜிங்: சீனா வெளியிட்டுள்ள புதிய வரை படத்தில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அக்ஷய் சின் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம் தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தை ஜெஜியாங் மாகாணத்தின் டெகிங் பகுதியில் நேற்று கொண்டாடியது. இதை முன்னிட்டு இந்தாண்டுக்கான தேசிய வரைபடம் வெளியிடப்பட்டது. அதில் அருணாச்சல பிரதேசத்துக்கு தெற்கு திபெத் என பெயரிட்டும், கடந்த 1962-ம்ஆண்டு போரில் ஆக்கிரமித்த பகுதியை அக் ஷய் சின் என்றும் சீனா கூறியுள்ளது.
இதேபோல் தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தெற்கு சீன கடல் பகுதியையும், தனது பகுதியாக புதிய வரைபடத்தில் சீனா தெரிவித்துள்ளது. தெற்கு சீன கடலின் பெரும் பகுதியை தனது பகுதியாக சீனா உரிமை கொண்டாடியுள்ளது. இந்த தெற்கு சீன கடல் பகுதியில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பிரமதர் மோடி பேசினார். அப்போது இந்தியா-சீனா எல்லை பகுதிகளில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் கவலையளிப்பதாக தெரிவித்தார். இந்தியா-சீனா உறவு இயல்பு நிலைக்கு திரும்ப எல்லையில் அமைதி நிலவுவது முக்கியம் என பிரதமர் மோடி அப்போது வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் க்வத்ரா தெரிவித்தார்.
புதிய வரைபடம் குறித்து சீனஇயற்கை வளங்கள் துறைஅமைச்சகத்தின் திட்டமிடல் துறை தலைவர் வூ வென்சாங் கூறும்போது, "நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் வரைபடம் புவியியல் அமைப்பு தகவல்கள் முக்கிய பங்காற்று கின்றன. இயற்கை வளங்கள் மேலாண்மை, சூழலியல் மற்றும் நாகரீகங்களை உருவாக் கவும் இது உதவுகிறது" என்றார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு, சர்வதேச விதிமுறைகளை மீறி, அடுத்த நாடுகளின் எல்லைகளை உரிமைகொண்டாடுவதில் மிக மோசமான வியூகங்களை பயன்படுத்துகிறது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ‘‘இது சீனாவின் பழைய பழக்கம். நமது பகுதிகள் என்ன என்பதில் இந்த அரசு மிக தெளிவாக உள்ளது. அபத்தமாக உரிமை கோருவதன் மூலம், அடுத்த நாட்டின் பகுதிகள் சீனாவுடையது ஆகாது’’ என்றார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தம் பாக்சி கூறும்போது, ‘‘சீனா இதுபோல் கூறுவதுமுதல் முறையல்ல. இதுபோன்ற முயற்சிகளுக்கு, இந்தியா ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி. புதிதாக பெயர் வைப்பதால், உண்மை நிலவரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...