Published : 14 Dec 2017 10:32 AM
Last Updated : 14 Dec 2017 10:32 AM

உலக மசாலா: மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது

யு

டியூப் மூலம் உடற்பயிற்சி, சமையல், விளையாட்டு, ஃபேஷன் போன்ற பல விஷயங்கள் இப்போது சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. யுடியூப் பிரபலங்களும் திரைப்பட நட்சத்திரங்களைப்போல் பிரபலமாகி வருகிறார்கள். அதிக வருமானம் ஈட்டுகிறார்கள். அவர்களில் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருப்பவர் 6 வயது ராயன். யுடியூப் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டும் சிறுவன். தன்னுடைய ராயன் யுடியூப் சேனல் மூலம், விதவிதமான பொம்மைகளை தனக்கே உரிய மொழியில் மிக அழகாக அறிமுகப்படுத்துகிறார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான குழந்தைகள் ரசிகர்களாக இருக்கிறார்கள். ராயன் யுடியூப் சேனல் ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் புகழின் உச்சிக்குச் சென்றுவிட்டார். 2016 ஜூன் முதல் 2017 ஜூன் வரையிலான காலகட்டத்தில் 800 கோடி முறை இவரது வீடியோக்கள் பார்க்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் ரூ.71 கோடி சம்பாதித்திருக்கிறார் ராயன். ஃபோர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட யுடியூப் குறித்த கட்டுரையில், அதிக வருமானம் ஈட்டும் சிறுவன் ராயன் 8-வது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இவர், ஸ்மாஷ் என்ற நகைச்சுவை சேனலுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பல குழந்தைகள் ரயானைப் பார்த்து, அதேபோல் வீடியோக்களை எடுத்து கலக்கி வருகிறார்கள்.

“குழந்தையிலிருந்தே நிறைய வீடியோக்களை விரும்பிப் பார்ப்பான். ஒருநாள் இதேபோல் தானும் வீடியோவில் வரவேண்டும் என்று கேட்டான். ஒரு ரயில் பொம்மையை வாங்கிக் கொடுத்து, அவனை வீடியோ எடுத்தோம். நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை, அவ்வளவு அழகாக அந்தப் பொம்மையை அறிமுகம் செய்தான். உறவினர்கள், நண்பர்களுக்கு அதை அனுப்பி வைத்தோம். எல்லோரிடமும் பாராட்டுகள் குவிந்தன. இப்படித்தான் இவனது யுடியூப் சேனல் ஆரம்பமானது. மூன்றே ஆண்டுகளில் 1 கோடி பேர் சந்தாதாரர்களாக இருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய விஷயம். பாதுகாப்பு கருதி ராயனின் முழுப் பெயரையோ, முகவரியையோ நாங்கள் இதுவரை வெளியிட்டதில்லை” என்கிறார் ராயனின் அம்மா.

“சின்ன வயதில் இருந்தே பொம்மைகளை அறிமுகம் செய்யும் வீடியோக்களைத்தான் பார்ப்பான். இன்று அந்த நிகழ்ச்சிக்கே சூப்பர் ஸ்டாராகிவிட்டான். என் மனைவிதான் முழுக்க முழுக்க ராயனின் சேனலை நிர்வகிக்கிறார். நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யும் பொம்மைகளை குழந்தைகளுக்கான அறக்கட்டளைகளுக்கு வழங்கி விடுகிறோம். இன்றுவரை தன்னுடைய வேலையை மிகவும் ரசித்து, உற்சாகமாக செய்கிறான். என்றாவது ஒருநாள் அவன் இதை விட்டுவிட விரும்பினால் அதையும் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்” என்கிறார் இவரது அப்பா.

தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நீச்சல் குளம், பொம்மை ரயில், பேருந்து, பார்ட்டி பொம்மைகள், பிக்னிக் பொம்மைகள் என்று ஒவ்வொன்றையும் மிக அழகாகவும் இயல்பாகவும் குழந்தைத் தன்மையுடனும் அறிமுகம் செய்வதுதான் ராயனின் தனிச்சிறப்பு. சமையல் பொம்மைகளை அறிமுகம் செய்யும்போது சந்தேகங்களை அம்மாவிடம் கேட்டுக்கொண்டே, சமைத்துக் காட்டுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். என்றாவது இந்த வேலை பிடிக்காமல் போனால்கூட, ஏராளமான புகழையும் பல தலைமுறைகளுக்கு பணத்தையும் சம்பாதித்துவிட்டார் இந்த ராயன்.

மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x