

உள்நாட்டு அரசியல் குழப்பம் நிலவும் நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப்படை வீரர்களை அனுப்பக்கூடாது என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி பேசியதாவது:
உள்நாட்டு அரசியல் குழப்பம் நிலவும் பல்வேறு நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப் படை வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள். இதனால் அமைதிப் படை வீரர்களின் உயிருக்கு ஆபத்து, அச்சுறுத்தல் ஏற்படுகிறது. உலக அமைதியைக் காக்க வேண்டிய முக்கியமான பணிகளுக்கு மட்டுமே அமைதிப் படையை பயன்படுத்த வேண்டும்.
அமைதிப்படையை வழி நடத்துவதில் தலைமை அமைப்பு இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அமைதிப் படைக்கான பணிகளைத் திட்டமிடும்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் கலந்தாலோசிக்க வேண்டும்.
அமைதி காக்கும் பணிகளில் இந்தியாவின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். அதற்கான ஆலோசனைகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். ஐ.நா. பட்ஜெட்டில் அமைதிப் படை வீரர்களின் பராமரிப்புச் செலவுக்காக போது மான நிதி ஒதுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். ஐ.நா. அமைதிப் படையில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் இந்திய வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.