

உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இந்திய வம்சாவளி விமானப் பணியாளர் ஒருவரும் இறந்தார். இவர் பணிநேரத்தை (ஷிப்ட்) மாற்றிக்கொண்டதால் உயிரிழக்க நேரிட்டதாக தெரியவந்துள்ளது.
41 வயதான சஞ்சித் சிங் சந்து மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் பணியாளராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் வியாழக்கிழமை அவர் சக ஊழியரிடம் பேசி பணிநேரத்தை மாற்றிக்கொண்டார். இதனால் அவர் வியாழக்கிழமை பிற்பகல் நெதர்லாந்தில் இருந்து புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணியாற்ற நேரிட்டது.
இந்நிலையில் இந்த விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர்.விபத்து குறித்து சஞ்சித் சிங் சந்துவின் தந்தை ஜிஜார் சிங் கூறும்போது, “மலேசியாவின் பெனாங் நகருக்கு சஞ்சித் வந்துசேர்ந்தவுடன் அவனுக்கு பிடித்தமான உணவுகளை சமைக்க அவனது தாயார் திட்டமிட்டிருந்தார். விமானம் புறப்படுவதற்கு சற்று முன் எனது மகன் என்னிடம் போனில் பேசினான்.
ஆனால் அவனுடன் பேசுவது அதுதான் கடைசியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை” என்று கண்ணீர்விட்டார். மகன் இறந்த செய்தியை ஜிஜார் தனது மருமகள் மூலம் அறிந்தார். ஜிஜாரின் மருமகளும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கிறார்.