

298 உயிர்களைப் பலிவாங்கிய எம்.எச்.17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ஏழை நாடுகளுக்கு எய்ட்ஸ் சிகிச்சையைக் கொண்டு சென்ற ஹாலந்து நாட்டு விஞ்ஞானி ஒருவரும் பலியாகியுள்ளார்.
வைரஸ் ஆய்வில் பெயர் பெற்ற ஜோயெப் லாங்கே என்ற அந்த விஞ்ஞானி மறைந்தது சர்வதேச மருத்துவ உலகை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
லாங்கே 1990ஆம் ஆண்டு முதல் எய்ட்ஸ் மருத்துவ சிகிச்சை முறையை ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டத்தில் உள்ள ஏழை நாடுகளுக்கும் எடுத்துச் சென்றதில் புகழ்பெற்றவர்.
“எச்.ஐ.வி. ஆய்வு மற்றும் சிகிச்சையில் லாங்கேயின் பங்களிப்பு அபரிமிதமானது, அனைத்தையும் விட குறைந்த செலவில் எய்ட்ஸ் சிகிச்சையை ஆசிய, ஆப்பிரிக்க ஏழை மக்களுக்குக் கொண்டு செல்வதில் அவர் காட்டிய தீவிரமும், கடப்பாடும் அபரிமிதமானது” என்று சிட்னியில் உள்ள எய்ட்ஸ் ஆய்வாளர் டேவிட் கூப்பர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்டர்டாம் பல்கலைக் கழகத்தில் வைரஸ் ஆராய்ச்சித்துறையில் பணியாற்றியவர் லாங்கே. அவர், எச்.ஐ.வி. எதிர்ப்பு மருந்தை தடுத்து ஆட்கொள்ளும் வைரஸை அழிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் நிபுணர். மேலும் தாயிடமிருந்து குழந்தைகளுக்குத் தொற்றும் வைரஸ்களை தடுப்பது குறித்தும் அவரது ஆய்வு பெரும் பங்களிப்பு செய்துள்ளது.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஒரு மருந்து எடுபடாமல் போனால் பல மூலப்பொருட்கள் கலந்த மருந்தை எப்படி பயன்படுத்தி எய்ட்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவது என்பதில் அவர் நிபுணர்.
2000ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து இல்லாமல் பல சாவுகள் நிகழ்ந்து கொண்டிருந்த தருணத்தில் லாப நோக்கமற்ற அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி எய்ட்ஸ் மருந்துகளை அங்கு கொண்டு சென்ற அரிய பணியை மேற்கொண்டவர் லாங்கே.
இவரது அறக்கட்டளையால் சிகிச்சைக்கு வாய்ப்பேயில்லாத சுமார் 1 லட்சம் ஆப்பிரிக்க மக்கள் பயனடைந்துள்ளனர். அவரது இழப்பு எய்ட்ஸ் நோயாளிகளின் இழப்பு என்று அந்த அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிறிதும் சுயநலமற்ற லாங்கே, எய்ட்ஸ் நோய் சிகிச்சையில் பெரும் முன்னேற்றம் காணும் தறுவாயில் பலியாகியிருப்பது எங்களை நிலைகுலையச் செய்துவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.