Published : 16 Dec 2017 09:42 AM
Last Updated : 16 Dec 2017 09:42 AM

ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை ஈரான் மீறியதற்கு ஆதாரம் உள்ளது: அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே பேட்டி

ஆயுத உற்பத்தி தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை ஈரான் மீறியதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே தெரிவித்தார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இதுதொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “ஈரான் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஐ. நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இயற்றப்பட்ட தீர்மானங்களை மீறி ஈரான் செயல்பட்டதற்கு வலுவான ஆதாரங்கள் கிடைத் துள்ளன.

ஈரான் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டு இங்குள்ள கிடங்குக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பிராந்தியத்தில் எமது கூட்டாளி நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலின்போது பயன்படுத்திய இந்த ஆயுதங்கள் எங்களது படைகள் மூலம் கைப்பற்றப்பட்டவை. தற்போது உங்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது ஈரான் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டதாகும். இதை எங்கள் படையினர் கைப்பற்றி வந்துள்ளனர். ஏமன் பகுதியிலிருந்து சவுதி அரேபியா மீது ஹௌதி பயங்கரவாதிகள் இந்த ஏவுகணையைப் பயன்படுத்தி யுள்ளனர்.

இந்த ஏவுகணையானது ரியாத்திலுள்ள விமான நிலையைத்தை நோக்கி ஏவப்பட்டதாகும். தவறி வேறு இடத்தில் வெடித்துள்ளது.

ஒருவேளை இந்த ஏவுகணைகளை டல்லஸ் விமான நிலையம், பாரிஸ், லண்டன், பெர்லின் போன்ற நகர விமான நிலையங்கள் மீது ஏவியிருந்தால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஈரான் தீவிரவாதத்துக்கு துணை போகிறது என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஏமனிலுள்ள ஹௌதி தீவிரவாதிகளுக்கு, ஈரான் சட்டவிரோதமாக பயங்கர ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது. இவை அனைத்தும் ஐ. நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிரானவை.

ஹௌதி பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்களை இங்கு வைத்திருக்கிறோம். ராடார கருவிகளைப் பாழாக்கும் கருவிகள், கப்பல்களைத் துளையிடும் வெடிமருந்துப் படகுகள் போன்றவற்றை இங்கு காணலாம். இந்த வகை கருவிகள் ஈரானில் தயாரிக்கப்பட்டவை. இதில் குறிப்பாக சி, ஈரான் அரசின் பாதுகாப்பு அமைச்சக நிறுவனங்களால் தயாரிக்கப்படுபவை. இதன்மூலம் சர்வதேச பயங்கரவாதத்தை ஈரான் ஆதரித்து வருகிறது என்பது தெளிவாகிவிட்டது” என்றார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x