

காஸா மீது நான்காவது நாளாக இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில், 100 பேர் பலியாயினர். நான்காவது நாளில் மட்டும் 10 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை முதல் இஸ்ரேல்-காஸா மோதல் நடைபெற்று வருகிறது. இதில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும்- இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, ஹமாஸ் தீவிரவாதிகள் லெபனான் நாட்டிலிருந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
லெபனான் அரசு செய்தி நிறுவனம் இது தொடர்பாகக் கூறும்போது, ‘இரண்டு ராக்கெட்டுகள் லெபனான் எல்லையிலிருந்து ஏவப்பட்டுள்ளழ. இதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை” எனத் தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள பெட்ரோல் பங்க் வெடித்துச் சிதறியது.
இதனிடையே, காஸா மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரே இரவில் 10 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். கன்னாம் வீட்டின் மீது நடத்திய விமானத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேற்கு ராபா பகுதியில் மற்றொருவர் உயிரிழந்தார். காஸா நகரில், 5 அடுக்கு வீட்டின் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் தொடுத்ததில், ஒருவர் உயிரிழந்தார்.
‘கடந்த ஒருவாரமாக இஸ்ரேல் விமானப்படை நடத்தி வரும் தாக்குதலில் 100 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்; 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்’ என காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சிதிலமடைந்துள்ளன. 2,000 பேர் வீடிழந்துள்ளனர் என காஸா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.