

ஸ்பைடர் மேன் போல் உடையணிந்த 25வயது நபர் ஒருவர் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் பெண் சுற்றுலாப்பயணி ஒருவரிடம் பணம் அதிகம் கேட்டார். இதனைத் தட்டிக் கேட்ட போலீஸைத் தாக்கியுள்ளார்.
ஜூனியர் பிஷப் என்ற இந்த நபரை போலீஸ் கைது செய்துள்ளது.
டைம்ஸ் ஸ்கொயரில் ஸ்பைடர் மேன் போல் உடையணிந்த இந்த நபர் சுற்றுலாப்பயணிகள் இருவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பிறகு பெண் சுற்றுலாப்பயணி டாலர் ஒன்றை அவருக்கு இனாமாகக் கொடுத்துள்ளார்.
அதனை ‘ஸ்பைடர் மேன்’ வாங்க மறுத்ததோடு, 5 டாலர், 10 டாலர், 20 டாலருக்குக் கீழ் தான் வாங்குவதில்லை என்று கூறியுள்ளார்.
இந்த வாக்குவாதத்தை அருகில் இருந்து பார்த்த போலீஸ் ஒருவர் அந்தப் பெண்ணிடம் உங்களுக்கு விருப்பப்பட்ட தொகையை கொடுங்கள் என்று கூறினார்.
இதில் ஆத்திரமடைந்த 'ஸ்பைடர் மேன்' ‘உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ’ என்று போலீஸிடம் கூறினார்.
போலீஸ் உடனே 'ஸ்பைடர் மேனிடம்' அடையாள அட்டையைக் கேட்டுள்ளார். அவரிடம் எதுவும் இல்லாத காரணத்தினால் கைது செய்யப்பட்டார். அப்போதுதான் ஸ்பைடர் மேன் போலீஸ் முகத்தில் ஒரு குத்து விட்டார். இதனால் போலீஸ் அதிகாரி கண்ணுக்குக் கீழ் பயங்கரமாக வீங்கிப் போனது.
பிறகு 'ஸ்பைடர் மேனை' போலீஸ் காவலுக்குக் கொண்டு சென்றனர்,
டைம்ஸ் ஸ்கொயரில் விந்தை மனிதர்களின் விசித்திரத் தொல்லைகள் அதிகரித்திருப்பதாக சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி அடைந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.