கோப்புப்படம்
கோப்புப்படம்

பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.290, டீசல் ரூ.293

Published on

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 14-ம் தேதி அன்வர் உல் ஹக் ககர் இடைக்கால பிரதமராக, நியமிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. எரிபொருள் மட்டுமல்லாது, தக்காளி, வெங்காயம், அரிசி, கேஸ் சிலிண்டர் என 54 அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்துள்ளது. இதனால், தேவையான பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாத சூழலில் அந்நாடு உள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச செலாவணி நிதியத்திடமும், நட்பு நாடுகளிடமும் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது. பாகிஸ்தானுக்கு, 3 பில்லியன் டாலர் (ரூ.24,600 கோடி) நிதியுதவி வழங்க கடந்த மாதம் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் வழங்கியது. முதற்கட்டமாக 1.2 பில்லியன் டாலர் (ரூ.9,850 கோடி) நிதி வழங்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடி சூழல் தொடர்ந்து தீவிரமடையும்பட்சத்தில், பாகிஸ்தானில் நடுத்தர வர்க்க மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in