

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் நடைபெற்று வரும் தாக்குதல்களை 5 மணி நேரம் நிறுத்தி வைக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. ஐ.நா.வின் வேண்டுகோளுக்கு இணங்க மனிதாபிமான அடிப் படையில் இந்த முடிவு எடுக்கப் பட்டது. இதன் மூலம் 9 நாள் களாக நிகழ்ந்து வந்த தாக்குதல் களுக்கு சிறிய இடைவேளை கிடைத்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் இது வரை 226 பாலஸ்தீனர்கள் இறந்து விட்டதாகவும், 1,678 பேர் காய மடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்து கின்றனர் என இஸ்ரேல் குற்றம்சாட் டியுள்ளது. இறுதியாக நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பாலஸ்தீன சிறார் கள் உயிரிழந்தனர். இதையடுத்து மத்திய கிழக்கு அமைதி முயற்சிக் கான ஐ.நா. சிறப்பு ஒருங்கிணைப் பாளர் ராபர்ட் செர்ரி அமைதி நடவடிக்கை மேற்கொண்டார். மனிதாபிமான அடிப்படையில் காஸா பகுதியில் தாக்குதலை நிறுத்த வேண்டுமென்று இஸ்ரேலை அவர் கேட்டுக் கொண்டார். இதனை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது.
இது தொடர்பாக ஹமாஸ் அமைப்புக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பும் தாக்குதலை 5 மணி நேரம் நிறுத்த ஒப்புக் கொண்டன. பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்படுத்த எகிப்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு முழு ஆதரவு அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.