

சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர், கம்போடிய மலையிலிருந்து தவறிவிழுந்து 7 நாட்களுக்குப் பின்பு உயிருடன் திரும்பினார்.
சிங்கப்பூரில் தேசிய கல்வி நிறுவனத்தின் மாணவர் சஞ்சய் ராதாகிருஷ்ணா (26). இவர் கம்போடியாவில் டிரெக்கிங் (மலேயேறும் நடைப்பயணம்) செல்வதற்காக தனியாக புறப்பட்டுச் சென்றார். ஆனால் ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகு அவரை அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஏற்கெனவே திட்டமிட்டபடி அவர் ஜூலை 2-ம் தேதி சிங்கப்பூர் திரும்பவும் இல்லை. அவரைப் பற்றிய தகவல் கேட்டு செய்தி ஒன்று பேஸ்புக்கில் பரவியது.
இந்நிலையில் கம்போடியாவின் பினோம் அவ்ரால் மலையடிவாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்போடிய போலீஸார் அவரைக் கண்டனர். பிறகு அவரை சிங்கப்பூர் தூதரகத்தில் ஒப்படைத்தனர். இதன் பிறகே, அவர் மலையிலிருந்து தவறிவிழுந்து, 7 நாட்கள் உணவின்றி மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு உயிருடன் திரும்பிவந்துள்ளது தெரியவந்தது.
டிரெக்கிங் செல்லும்போது தவறிவிழந்த சஞ்சய் ராதாகிருஷ்ணா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். என்றாலும் வழி தெரியாமல் காட்டில் சிக்கித் தவித்துள்ளார். பிறகு நீர்வீழ்ச்சியை தொடர்ந்து செல்லும் ஆற்றில் நீந்தியும், பாறைகளை கடந்தும், மரங்களில் ஏறித் தாவியும் பல நாட்களுக்குப் பிறகு கிராமம் ஒன்றை அடைந்துள்ளார். சிறிது ஓய்வுக்குப் பின் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்./