

இராக்கில் கிறிஸ்தவர்களும் பிற சிறுபான்மை இனத்தவரும் இலக்கு வைத்து ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாக ஐநா பாதுகாப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு சபையில் திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
சிறுபான்மை இனத்தவர்கள் இலக்குவைத்து ஒடுக்கப்படுவது மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக கருதப்படும். இந்த பிராந்தியத்தில் நீண்ட நெடுங்காலமாக பல பரம்பரைகளாக வசித்துவரும் கிறிஸ்தவர்களுக்கு ஐஎஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகவும் பல்வேறு வகுப்பினர், கலாச்சாரங்களை கொண்டு பொதுநகராகவும் விளங்கும் மோசுல் நகரிலிருந்து இந்த வார இறுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வெளியேறி உள்ளன. இராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மற்றும் அதனுடன் உறவு வைத்துள்ள ஆயுதமேந்திய குழுக்களின் தீவிரவாத கொள்கைகளை ஏற்க மறுப்பவர்களையும் சிறுபான்மை இனத்தவரையும் ஒடுக்குவதை ஏற்கவே மாட்டோம். இது கடும் கண்டனத்துக்குரியது என சபையின் 15 உறுப்பு நாடுகளும் ஒருமனதாக சம்மதித்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளன.
சிறுபான்மையினருக்கு எதிரான பயங்கரவாத தாக்குதலை சமாளிக்கவும் போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களின் மனிதாபிமான தேவைகளை பூர்த்திசெய்யவும் ஐநா சபையும் இராக் அரசும் முன்வரவேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
வட இராக்கில் கிறிஸ்தவ மதத்தின் அடையாளச் சின்னமாக விளங்கிய 4 வது நூற்றாண்டு மார் பெஹ்னம் தேவாலயத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றிய தீவிரவாதிகள் அங்கிருந்து கிறிஸ்தவ குருமார்களை வெளியேற்றினர். மதம் மாறு, இல்லையெனில் சிறப்பு கப்பம் கொடு, அல்லது தப்பியோடு, இல்லையெனில் தலை தப்பாது என மோசுல் நகரை தமது கட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் எச்சரிக்கவே வீடு, உடமைகைளை அப்படியே போட்டுவிட்டு தப்பினால்போதும் என கிறிஸ்தவர்கள் காலி செய்கின்றனர்.