

இராக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க உயர் அதிகாரிகள் பிராந்திய தலைவர்களின் ஆதரவை கோரியுள்ளனர்.
இராக்கில் ஐக்கிய அரசு அமைவதற்கான வாய்ப்புகள் அருகிவருவதால் பிராந்திய தலைவர்களின் தயவை நாடியுள்ளது அமெரிக்கா. சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவை தொலைபேசியில் அழைத்துப் பேசினார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. துணை அதிபர் ஜோ பிடன் இராக்கின் முந்தைய நாடாளுமன்றத்தின் தலைவர் ஒசாமா அல் நுஜைபியை தொடர்பு கொண்டு பேசினார்.
இராக்கை ஒற்றுமைப்படுத்தக் கூடிய புதிய அரசு அமைப்பதன் முக்கியத்துவத்தை பிடனும் நுஜைபியும் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, குர்து தன்னாட்சிப் பிராந்தியத்தின் தலைவர் மசூத் பர்சானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்நிலையில் அரசுக்கு எதிரான சண்டையில் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என பிரதமர் மாலிகி அறிவித்துள்ளார். இது அரசுக்கு எதிராக போரிட்டு வரும் கூட்டணியை உடைக்க எடுத்துள்ள நடவடிக்கை என கருதப்படுகிறது.
ஷியா பிரிவினர் ஆதிக்கம் மிக்க அரசு மீது ஆத்திரத்தில் இருக்கும் சன்னி தீவிரவாதிகளை திருந்த வைக்க அரசியல் சமரச முயற்சி தேவை என விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சிறுபான்மை சன்னி பிரிவினரில் பெரும்பாலானோர் இராக்கில் போரிடும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தர விரும்பவில்லை என்றாலும் அதிகாரிகளால் தாம் மோசமாக நடத்தப்படுவதாக வேதனையில் உள்ளனர். எனவே பாதுகாப்புப் படைகளுக்கு அவர்கள் ஒத்துழைப்பு தருவார்களா என்பது தெரியவில்லை.
புதிய நாடாளுமன்றம் கூடியபோதிலும் கூச்சல், குழப்பத்தால் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இப்போதைய ஏற்பாட்டின்படி ஷியா பிரிவைச் சேர்ந்தவருக்கு பிரதமர் பதவி, சன்னி பிரிவைச் சேர்ந்தவருக்கு நாடாளுமன்றத் தலைவர் பதவி, குர்து பிரிவைச் சேர்ந்தவருக்கு அதிபர் பதவி என்பது முன் வைக்கப்படும் யோசனை. இந்த யோசனை ஏற்கப்பட்டால் 8-ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என எம்பி மஹதி ஹபேஸ் கூறினார்.
இதனிடையே, பாக்தாதின் தெற்கே சன்னி தீவிரவாதிகளுடன் அரசுப் படைகளின் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். தீவிரவாதிகளை சமாளிக்க ரஷ்யாவிடமிரு்நது சுகோய் போர் விமானங்களை வாங்கியுள்ளது அரசு.
எல்லையில் 30 ஆயிரம் வீரர்கள் இராக்கையொட்டிய தமது எல்லையில் சுமார் 30000 வீரர்களை பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தியுள்ளது சவூதி அரேபியா. எல்லையிலிருந்து இராக் தமது படைகளை வாபஸ் பெற்றதால் இந்த நடவடிக்கை.
சவூதி அரசின் அல் அராபியா தொலைக்காட்சி இந்த தகவலை வெளியிட்டது. தீவிரவாத தாக்குதல் ஆபத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள வீரர்களை எல்லைக்கு அனுப்பியுள்ளதாக சவூதி மன்னர் தெரிவித்தார்.