பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: அடுத்தது என்ன?

நேற்று (ஆகஸ்ட் 9) நாடாளுமன்றத்தின் கடைசி நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
நேற்று (ஆகஸ்ட் 9) நாடாளுமன்றத்தின் கடைசி நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
Updated on
1 min read

கராச்சி: கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அதிபர் ஆரிப் ஆல்வி பிறப்பித்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய 3 நாட்கள் பாக்கி இருந்த நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையில் முன்கூட்டியே நேற்று நள்ளிரவில் கலைக்கப்பட்டது.

பாகிஸ்தானில் கடந்த 2018-ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது.இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. பிரதமராக அவர் 4 ஆண்டுகள் இருந்துவந்த நிலையில் அந்த ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த முக்கியக் கட்சி ஆதரவை விலக்கிக் கொள்ள அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியுற்று பதவி இழந்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. பாகிஸ்தான் பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக நேற்றிரவு நாடாளுமன்ற கலைக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானிலும் இந்தியாவைப் போல 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றம் பதவிக்காலம் முடிந்து 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் நாடாளுமன்றம் பதவிக்காலம் முடியும் முன்னரே அதனைக் கலைத்தால் 90 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். கூடுதலாக 30 நாட்கள் கிடைக்கும் என்பதாலேயே பிரதமர் நாடாளுமன்றத்தை முன் கூட்டியே கலைக்க பரிந்துரைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ் சாட்டி வருகின்றன.

அண்மையில் தான் அரசு கருவூலப் பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத் தீர்ப்பின்படி, இம் ரான் கான் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. இனி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தினால் இம்ரான் கான் இல்லாத களத்தை சந்திக்கலாம் என்பதாலேயே பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாக இம்ரான் கான் கட்சியினர் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in