விபத்திலிருந்து தப்பியது அமெரிக்க விமானம்

விபத்திலிருந்து தப்பியது அமெரிக்க விமானம்
Updated on
1 min read

அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசரகால வெளியேறும் கதவு திறந்தபோதும், விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் விபத்திலிருந்து தப்பியது.

போயிங் 737-700 ரக விமானம் சிகாகோவிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டது. 96 பயணிகள் 5 ஊழியர்கள் அதில் இருந்தனர். 38 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கேபின் அழுத்தத்தை இழந்தது. இதனால் 12 நிமிடத்தில் 11 ஆயிரம் அடி உயரத்துக்கு விமானம் சரிந்தது.

இதையடுத்து, விமானி சாதுர்யமாக செயல்பட்டு கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விசிடா மிட்-கான்டினென்ட் விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இதனால் அதில் இருந்த 101 பேரும் நூலிழையில் உயிர் தப்பினர்.

விமானத்தின் நடுப்பகுதியில் உள்ள அவசரகால வெளியேறும் கதவு திறந்ததே இதற்குக் காரணம் என விமானப் போக்குவரத்துத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பயணி ஒருவர் அந்தக் கதவைத் திறக்க முயன்றதாக வெளியான தகவல் தவறானது. அவ்வாறு திறப்பது இயலாத காரியம் என்றும் அவர் தெரிவித்தார்.

கதவு திறந்தபோது அனைத்து பயணிகளும் இருக்கையில் அமர்ந்திருந்ததாக அமெரிக்க விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விமான நிறுவன பராமரிப்பு ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in