

ஐ.நா., மற்றும் அமெரிக்காவினால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட, மும்பை 26/11, 2008 தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் என்றும் கருதப்படும் ஹபீஸ் சயீதை விடுதலை செய்யுமாறு லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதி மறுசீராய்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
வீட்டுக்காவலில் இருந்து வரும் ஹபீஸ் சயீத் வெள்ளிக்கிழமை நள்ளிரவு விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி இறுதியிலிருந்து வீட்டுக்காவலில் இருக்கிறார் ஹபீஸ் சயீத், வெள்ளிக்கிழமை நள்ளிரவு இவரது வீட்டுக்காவல் உத்தரவு காலாவதியாகிறது.
லாகூர் உயர் நீதிமன்ற மறுசீராய்வு வாரியத்தின் நீதிபதிகள், யவார் அலி, அபுஸ் சமி கான், ஏலியா நீலம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் ஹபீஸ் சயீத் ஆஜரானார்.
“பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை நீதி என்ற கருத்தாக்கத்தை அச்சுறுத்த முடியாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தீர்ப்பு வெளிவந்தவுடன் ரோஜாப்பூக்களுடன் ஹபீஸ் சயீதுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.
ஹபீஸ் சயீதுக்கு எதிராக புகார் அறிக்கை தாக்கல் செய்யக் கோரி லாகூர் உயர் நீதிமன்ற மறுசீராய்வு வாரியம் அரசை வலியுறுத்தி வந்தது, ஆனால் அரசு இதற்குச் செவிசாய்க்கவில்லை.
கடந்த மாதம் அவர் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை அரசு திரும்பப் பெற்றது.
சயீதும் அவரது ஜமாத் உத் தவா அமைப்பும் ஐநா, அமெரிக்காவினால் ஏற்கெனவே தடை செய்யப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.