

இராக்கில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நர்ஸ்கள் இந்தியா திரும்பிய நிலையில் அங்கு சிக்கியுள்ள 2,200 இந்தியர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இராக்கில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்து 46 நர்ஸ்கள் இந்தியா திரும்பிய பிறகு நேற்று ( ஞாயிற்றுக் கிழமை) மேலும் 200 பேர் தாயகம் திரும்பினர். இந்நிலையில் இன்று 117 பேர் டெல்லி விமான நிலையம் வந்தடைவார்கள் என தெரிகிறது.
இவர்களைத் தவிர இராக்கில் சிக்கியிருக்கும் 2,200 இந்தியர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 600 பேருக்கு அவர்கள் பணிபுரிந்த நிறுவனமே விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்துள்ளது. எஞ்சியுள்ள 1600 பேருக்கு இந்திய அரசு டிக்கெட் வழங்கியுள்ளது என வெளியுறவு செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 36 முதல் 48 மணி நேரத்தில் இராக்கின் நஜாப் விமான நிலையத்தில் இருந்து 200 இந்தியர்களுடன் இரண்டு விமானம் டெல்லி வந்தடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் இராக்கின் தெற்கு பகுதிகளில் பணிபுரிந்து வந்தவர்களாவர். இராக்கின் வடக்கு பகுதியே கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கிறது.