Published : 04 Aug 2023 10:22 AM
Last Updated : 04 Aug 2023 10:22 AM

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு உபசரிப்பு: ஒரே நாளில் சர்வதேச கவனம் பெற்ற மூதாட்டி

ப்ரூன்ஸ்விக்: தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டியவரின் பசியை போக்கிய அமெரிக்க மூதாட்டி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில் உள்ள ப்ரூன்ஸ்விக் நகரத்தைச் சேர்ந்தவர் மார்ஜோரி பெர்கின்ஸ். 87 வயது மூதாட்டியான பெர்கின்ஸ் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜூலை 26 அன்று பெர்கின்ஸ் தனது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 2 மணியளவில் இளைஞர் ஒருவர் பெர்கின்ஸின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

சத்தம் கேட்டு கண்விழித்த பெர்கின்ஸ் அந்த இளைஞர் கையில் கத்தியுன் தனது கட்டிலின் மீது நின்றுகொண்டிருப்பதை பார்த்து அலறியுள்ளார். அந்த இளைஞர் பெர்கின்ஸிடம் கத்தியால் கத்திவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். சுதாரித்து எழுந்த பெர்கின்ஸ் தனது காலணிகளை மாட்டிக் கொண்டு அந்த இளைஞரை எதிர்த்து துணிச்சலுடன் சண்டையிட்டுள்ளார். அந்த இளைஞர் தன்னை நெருங்காமல் இருக்க தனக்கு அவருக்கும் இடையே ஒரு நாற்காலியை வைத்து அவரை தடுத்துள்ளார்.

மூதாட்டி பெர்கின்ஸை தாக்கி கீழே தள்ளிய அந்த இளைஞர் சமையலறைக்குள் ஓடியுள்ளார். பின்னால் துரத்திச் சென்ற பெர்கின்ஸிடம் தனக்கு கடுமையாக பசிப்பதாக கூறியுள்ளார் அந்த இளைஞர். மனம் இரங்கிய மூதாட்டி பெர்கின்ஸ் தன் அறையில் இருந்த வேர்க்கடலை வெண்ணெய், பிஸ்கட்டுகள், ஆரஞ்சு பழங்களை எடுத்து வந்து அந்த இளைஞரிடம் கொடுத்துள்ளார். அந்த இளைஞர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தொலைபேசியில் 911 அவசர எண்ணுக்கு அழைத்துள்ளார். அந்த நேரத்தில் அந்த இளைஞர் தன்னுடைய கத்தி, காலணிகள் உள்ளிட்ட பொருட்களை அங்கேயே விட்டுட்டு தப்பிச் சென்றிருக்கிறார்.

மறுநாள் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் தீயாய் பரவி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் ஒரே நாளில் மூதாட்டி பெர்கின்ஸ் உலகப் பிரபலம் ஆகிவிட்டார்.

இது குறித்து அவர் கூறும்போது “42 ஆண்டுகளாக இந்த வீட்டில் நான் வசித்து வருகிறேன். இப்போதும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறேன். ஆனால் என்னுடைய கவலை எல்லாம் நாட்டில் தற்போது அதிகரித்து வரும் குற்றங்கள் தான். கடந்த சில ஆண்டுகளாக நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. குற்றவாளிகளுக்கு சிறைக்கு செல்வதில் எந்த பயமும் இல்லாமல் போய்விட்டது. அனைவரும் தான் விரும்பியதை செய்கிறார்கள்” என்றார்.

தப்பிச் சென்ற அந்த இளைஞரை தற்போது பிடித்துவிட்டதாக ப்ரூன்ஸ்விக் போலீஸார் தெரிவித்துள்ளனர். அந்த இளைஞர் மூதாட்டி பெர்கின்ஸ் வீட்டிலிருந்து சில மீட்டர் தூரத்தில் வசிப்பவர்தான் என்றும், அவர் மீது திருட்டு, கொலை மிரட்டல், தாக்குதல் மற்றும் 18 வயதுக்கு கீழ் மது அருந்துதல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அவருடைய வயதை கருத்தில் கொண்டு அவருடைய விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x