Published : 13 Jul 2014 10:00 AM
Last Updated : 13 Jul 2014 10:00 AM

ரஷிய அதிபர் புதின் கியூபா, நிகரகுவா பயணம்

ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், வெள்ளிக்கிழமை தனது கியூபா பயணத்துக்குப் பிறகு திடீர் பயணமாக நிகரகுவா சென்றார். புதின் 6 நாள் பயணமாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவர் தனது கியூபா பயணத்தை முடித்துக்கொண்டு நிகரகுவா சென்றார்.

நிகரகுவா இடதுசாரி தலைவரும் அதிபருமான டேனியல் ஆர்டெகா, தனது மனைவி மற்றும் ராணுவத் தலைவருடன்,புதினை விமான நிலையத்தில் வரவேற்றார். 1980-களில் சோவியத் யூனியனுக்கும் நிகரகுவாவுக்கும் மிக நெருங்கிய உறவு இருந்தது. சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு ரஷிய அதிபர் ஒருவர் நிகரகுவா செல்வது இதுவே முதல்முறை.

இதனை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஆர்டெகா குறிப்பிட்டார். அப்போது நிகரகுவாவுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த தனது அரசு விரும்புவதாக புதின் கூறினார். கியூபாவில், அந்நாட்டு அதிபர் ரவுல் காஸ்ட்ரோ மற்றும் புதின் முன்னிலையில் 10-க்கும் மேற்பட்ட உடன்பாடுகள் கையெழுத்தாகின. கியூபாவில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது, அந்நாட்டின் கடற்கரையில் எண்ணெய் துரப்பணப் பணி மேற்கொள்வது, அங்குள்ள 3 அனல்மின் நிலையங்களுக்கு ரஷ்யா உபகரணங்கள் சப்ளை செய்வது உள்ளிட்டவை இந்த உடன்பாடுகளில் அடங்கும்.

பனிப்போர் காலத்தில் கியூபாவில் தங்கியிருந்த ரஷ்ய வீரர்களில் பலர் உடல்நலக் குறைவினாலும், விபத்திலும் இறந்தனர். இவர்களின் கல்லறைக்கு இரு தலைவர்களும் சென்று அஞ்சலி செலுத்தினர். புதின் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவையும் சந்தித்துப் பேசினார். அவருடன் இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும், 1 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் புதின் கூறினார்.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உடனான உறவில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான உறவை பலப்படுத்தும் வகையில் புதின் இப்பயணம் மேற்கொண்டுள்ளார். புதின் தனது 6 நாள் பயணத்தில் அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறார். அங்கு நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.

புதின் ரஷியாவில் இருந்து புறப்படும் முன் தனது பயணத்தின் நோக்கம் குறித்து கூறும்போது, “லத்தீன் அமெரிக்க நாடுகள் கச்சா எண்ணெய் மற்றும் பாக்ஸைட் தாதுவளம் மிக்கதாக உள்ளன. இந்நாடுகளில் ரஷிய முதலீடுகளை அதிகரிப்பதற்கும் வர்த்தகத்தை பெருக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x