Published : 01 Aug 2023 01:54 PM
Last Updated : 01 Aug 2023 01:54 PM

‘வீகன்’ உணவு முறையை பிரச்சாரம் செய்து வந்த ‘இன்ஃப்ளூயன்சர்’ ஜானா மரணம்

மாஸ்கோ: ‘வீகன்’ உணவுமுறை குறித்த பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான 39 வயது ஜானா சாம்சோநோவாவின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த ஜானா சாம்சோநோவா ‘வீகன்’ உணவுகளை, குறிப்பாக பச்சை காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்வதை அவர் பிரச்சாரம் செய்து வந்தார்.
இதன் அடிப்படையிலேயே அவர் சமூக வலைதளங்களில் புகழும் கிடைத்தது. இந்த நிலையில், உணவு உண்ணாமல் பட்டினியால் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மரணம், அவரை பின்பற்றிய அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் இறுதியாக பதிவிட்ட வீடியோவில், “ஒவ்வொரு நாளும் என் உடலும் மனமும் மாறுவதை நான் காண்கிறேன். தற்போது உங்கள் முன் இருக்கும் என்னை நான் நேசிக்கிறேன். ஒருபோதும் இந்த உணவுப் பழக்கத்திலிருந்து நான் பின்வாங்க மாட்டேன்” என்று பேசி இருந்தார்.

காலரா போன்ற நோயால் அவர் இறந்திருக்கிறார் என்று ஜானாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். நீண்ட காலம் அவர் பட்டினியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இறப்புக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.

இதுகுறித்து ஜானாவின் நண்பர் ஒருவர் கூறும்போது, “நான் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் அவரைப் பார்க்கும்போது அவர் மிகுந்த சோர்வாக இருந்தார்.
அவரை சிகிச்சைக்காக வீட்டுக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், அவர் திரும்ப அங்கிருந்து வெளியேறினார். நான் அவரை கடைசியாக பார்த்தபோது அவர் உடல் நிலை மோசமாக இருந்தது. அவரை சிகிச்சை எடுத்து கொள்ளும்படி வலியுறுத்தினேன். ஆனால் அவர் அதனை கேட்கவில்லை” என்றார். கடந்த 7 வருடங்களாக ஜானா பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x