Published : 01 Aug 2023 07:09 AM
Last Updated : 01 Aug 2023 07:09 AM

ஹாங்காங்கில் உயரமான கட்டிடத்தில் ஏறிய பிரான்ஸ் நாட்டின் சாகச வீரர் 68-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு

ரெமி லுசிடி

ஹாங்காங்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெமி லுசிடி (30), உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள உயரமான கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் மீது ஏறி சாகசம் செய்து வந்தார். அந்த வகையில் ரெமி கடந்த வாரம் ஹாங்காங்கில் உள்ள 68 மாடிகளைக் கொண்ட ‘ட்ரெகுன்ட்டர்’ என்ற குடியிருப்பு கட்டிடத்துக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள பாதுகாவலர்களிடம் 40-வது மாடியில் உள்ள தன்னுடைய நண்பரை பார்க்கப் போவதாகக் கூறி உள்ளே சென்றுள்ளார். இதுபற்றி, நண்பர் என கூறியவரிடம் பாதுகாவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், ரெமியை தனக்கு தெரியாது என அவர் கூறியுள்ளார். இதையடுத்து, பாதுகாவலர் ஒருவர் ரெமியை தேடிச் சென்றுள்ளார். அதற்குள் கட்டிடத்தின் உச்சிக்கு சென்றுள்ளார் ரெமி. அங்கிருந்து சாகசம் செய்தபோது தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றினர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், கட்டிடத்தின் வெளிப்பக்கம் சிக்கிக்கொண்ட ரெமி ஜன்னலை தட்டி உதவி கோருகிறார். அந்த வீட்டில் இருந்தவர்கள் வருவதற்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெமி கடைசியாக, ஹாங்காங்கின் டைம்ஸ் சதுக்கத்தில் இருந்தபடி எடுத்த தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதனிடையே, அவரது மரண தகவலைக் கேட்ட சமூகவலைதளவாசிகள் அந்த பதிவுக்கு கீழே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x