

இந்திய கடற்படையை வலுப்படுத்துவதற்காக ஹர்பூன் ஏவுகணையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக, அமெரிக்க பாதுகாப்புத் துறை (பென்டகன்) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
வெளிநாடுகளுக்கான ராணுவ தளவாட விற்பனை திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு ரூ.1,220 கோடி மதிப்பிலான ஏவுகணை தொகுப்பை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 12 யுஜிஎம்-84எல் ஹர்பூன் பிளாக் 2 ஏவுகணைகள், 10 யுடிஎம்-84எல் ஹர்பூன் பயிற்சி ஏவுகணைகள், 2 ஹர்பூன் சான்றிடப்பட்ட பயிற்சி வாகனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த ஹர்பூன் ஏவுகணை தொகுப்பு இந்திய கடற்படைக்கு சொந்தமான ஷிஷுமர் வகை நீர்மூழ்கி கப்பலில் பணியில் ஈடுபடுத்தப்படும். மேலும் சிக்கலான கடல்வழி தொலைத்தொடர்பு வசதியை மேம்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த ஏவுகணை தொகுப்பு பயன்படும்.
இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் மற்றும் இந்திய கடற்படையின் பி-81 கடல்பரப்பு ரோந்து விமானம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக ஹர்பூன் ஏவுகணையை இந்தியா ஏற்கெனவே வாங்கி உள்ளது.