Published : 13 Nov 2017 03:38 PM
Last Updated : 13 Nov 2017 03:38 PM

மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு எண்ணெய் ட்ரம் மூலம் நீந்தி வரும் ரோஹிங்கியா சிறுவர்கள்

”நாங்கள் நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டோம். அதனால் நீரில் மூழ்கினாலும் பரவாயில்லை என்று நினைத்தேன்” - இவை வங்கதேசத்துக்கு கடலில் எண்ணெய் ட்ரம் மூலம் நீந்தி வந்த ரோஹிங்கியா சிறுவனின் வேதனை நிறைந்த வார்த்தைகள்.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கிய சிறுவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் ட்ரம்மை பயன்படுத்தி கடல், நதி வழியாக வங்கதேசம் அடைந்துள்ளனர்.

மியான்மரில் ராணுவத்தினர் அடக்குமுறைக்குப் பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்து வருகின்றனர். சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மியான்மர் முஸ்லிம்கள் வங்கதேச முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களில் பலர் தங்களது உயிரை படகுகளிடம், எண்ணெய் டேங்குகளிடம் பணயம் வைந்து வந்த கதை வங்கதேச அகதிகள் முகாம்களில் தினந்தோறும் உலவிக் கொண்டு வருகிறது.

அத்தகைய கதைகளில் ஒன்றுதான் நபியின் கதையும். பள்ளிக்கூடத்துக்குப் போகாத 13 வயது நபி ஹுசைன், அவனது பெற்றோருக்கு நான்காவது குழந்தை.

நபி ஹுசைன் இதற்கு முன் கடலைப் பார்த்ததில்லை. அவனுக்கு நீத்தவும் தெரியாது எனினும் மியான்மரில் அவன் அனுபவித்த துயரங்களிலிருந்து தப்பிக்க தனது வாழ்க்கையை காலியான எண்ணெய் டேங்கிடம் கொடுத்துவிட்டு, சுமார் 2.5 மைல்கள் கடலில் நீந்தி வங்க தேசத்துக்கு கரை சேர்ந்திருக்கிறான்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மியான்மரில் ரோஹிங்கியா பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் நடத்திய கொடூரமான தாக்குதலில் நபியின் இல்லம் தீக்கிரையானது. அன்றுதான் நபி அவனது கிராமத்தை இறுதியாகப் பார்த்தான்.

அங்கிருந்த பிணங்களைத் தாண்டி கடற்கரைக்கு ஓடிய நபியின் குடும்பத்திடம், வங்கதேசத்துக்குப் படகில் செல்ல போதிய பணமில்லை.இதனால் ஒவ்வொரு நாளும் அங்கும் கிடைந்த குறைந்த உணவுடன் நாளை செலவிட்டுள்ளனர். ஒரு நாள் நபி அவனது குடும்பத்திடம் தான் இங்கிருந்து வங்கதேசம் போகவுள்ளதாக தெரிவித்துள்ளான்.

முதலில் அதற்கு சம்மதிக்காத அவனது குடும்பம், அடுத்த நாள் 23 வயது இளைஞருடன் அவனைச் செல்ல அனுமதித்தது. தனது அம்மாவிடம் தனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறான் நபி.

இதோ கடலில் நீந்தி வந்த அனுபவத்தை நபி நம்மிடையே கூறுகிறான். ''எனக்கு மரணத்தின் மீது மிகுந்த பயம். ஆனால் நாங்கள் மியான்மரில் அனுபவித்த துன்பங்களுக்கு நீரிலே மூழ்குவதே பரவாயில்லை என்று நினைத்தேன். இதுவே எனது இறுதி நாள் என்று எனக்கு அன்று தோன்றியது.

கடல் நீர் உப்பு கரிக்கத் தொடங்கியது. எனது கால்கள் வலி கொடுக்கத் தொடங்கின. நான் பின்னால் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை.

சிறிது நேரத்துக்குப் பிறகு கண்விழித்து பார்த்தபோது நான் வங்கதேச தீவில் கரை சேர்ந்தேன்'' என்றான்.

நபி, தற்போது வங்கதேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கியுள்ள முகாம்களில் 40 ஆயிரம்பேர்களில் ஒருவனாக தங்கி இருக்கிறான்.

அந்த முகாமில் கண்களில் வெறுமையுடன் பார்த்து கொண்டிருக்கும் நபியின் தேவையாக அவன் கூறியது, அவனது பெற்றோரும், அமைதியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x