துபாய் ஷேக்கின் ராட்சத ஹம்மர் கார்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் வைத்திருக்கும் ஹம்மர் கார் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இது ராட்சத ஹம்மர். இந்த ஹம்மர் காரின் உயரம் 22 அடி, நீளம் 46 அடி, அகலம் 20 அடி. இந்தக் கார் ஹம்மர் ஹெச் 1 எக்ஸ் 3 என்று அழைக்கப்படுகிறது. வழக்கமான ஹெச் 1 மாடல் ஹம்மர் காரின் அளவைவிட மூன்று மடங்கு அதிகம் என்பதால் ‘எக்ஸ் 3’ என்று சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தக் காரின் உள்ளே படுக்கையறை, கழிப்பறை, சமையலறை உள்ளன. ஒவ்வொரு சக்கரத்துக்கும் தனித்தனி இன்ஜின் என இந்தக் காரில் நான்கு டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தக் கார் தொடர்பான புகைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்நிலையில் சாலையில் இந்தக் காரை ஓட்டிச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை இதுவரையில் 2 கோடி பேர் பார்த்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் ஷேக் ஹமத். அவருக்கு தற்போது 74 வயதாகிறது. அவரது சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலர் (ரூ.1.65 லட்சம் கோடி) ஆகும்.
ஷேக் ஹமத் தீவிர கார் பிரியர். கோடிக்கணக்கில் பணம் செலவழித்து விதவிதமான கார்களை வாங்கி சேகரித்து வருகிறார். அபுதாபில், கார்களுக்கென்று தனி அருங்காட்சியகம் வைத்துள்ளார். கார் சேகரிப்புகளுக்காக கின்னஸ் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.
